
சீனாவில் இப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டிற்கு நடுவே பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறிய சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டிரம்ப் வரியால் உலகளவில் பொருளாதார சிக்கல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், பெலாரஸ், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
2005 முதல் பார்வையாளராக இருந்த இந்தியா, மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு 2017ல் உறுப்பு நாடாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் மோடி கடந்த 7 ஆண்டுகளில் சீனா செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே இன்றைய தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியா குறித்துப் பேசியிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் நாம். மேலும், தெற்கு ஆசிய நாடுகளின் முக்கியமான நாடுகள் நாம். இரு நாட்டு மக்களின் நலனை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை, மனிதச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தல் ஆகிய வரலாற்றுப் பொறுப்புகள் நம் இருவருக்கும் உண்டு. இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகவும், இணக்கமான உறவுகளையும் கொண்ட நண்பர்களாக இருப்பது அவசியம். ஒருவருக்கொருவர் வெற்றிக்கு வழி வகுக்க உதவ வேண்டும்.
இரு நாடுகளும் ‘குளோபல் சவுத்’ பகுதிக்கு உட்பட்டவை. சமநிலையான உலக ஒழுங்கை உருவாக்குவதற்கு பொறுப்பையும் இரண்டு நாடுகளும் கொண்டிருக்கின்றன. டிராகனும் யானையும் ஒன்றிணைவது என்பதே சரியான தேர்வு" என்றார். ஏனெனில், ‘டிராகன்’ மற்றும் ‘யானை’ இணைந்து நடக்கும் போது, உலகம் ஒற்றுமையையும் வலிமையையும் காணும்." என்று பேசியிருக்கிறார்.
அதேபோல பிரதமர் மோடி தனது தொடக்க உரையில், "இந்தியா சீனா உறவுகளைப் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். கடந்த ஆண்டு கசனில், மிகவும் முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்றன. அவை இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த முக்கியமானதாக இருக்கிறது.. எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான சூழல் உருவாகியுள்ளது" என்றார்.
50 நிமிடங்களுக்கும் மேலாகப் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.. குறிப்பாக டிரம்ப் வரிக்குப் பிறகு இரு நாட்டு உறவு பல மடங்கு மேம்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் சீன அதிபர் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனச் சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.