
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் உலக நாடுகளின் எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து, ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடப்பட்டிருப்பது உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை முடக்கியுள்ளது. மேலும் அமெரிக்கா ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அண்டை நாடான வங்காளதேசம் துருக்கி வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில்கூட பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது
இதன் நேரடி பாதிப்பாக பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 321 ரூபாயாகவும், டீசல் விலை 335 ரூபாயாகவும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அங்கு போதிய எரிபொருள் இருப்பு இல்லாத காரணத்தால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இருப்பினும், இதேபோன்ற புவிசார் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்தியா, தனது சாதுரியமான வெளியுறவுக் கொள்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அண்டை நாட்டைப் போன்ற பாதிப்புகளைத் தவிர்த்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெற்று வந்தாலும், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது அடுத்த 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக அரசு உறுதி அளித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா கைகொடுத்துள்ளது. இந்திய கடல் எல்லைக்கு அருகே உள்ள தனது கப்பல்கள் மூலம் அடுத்த சில வாரங்களுக்குள் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா, இந்தியாவின் மொத்த தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்யவும் தயார் நிலையில் உள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் மற்றும் முறையான திட்டமிடல் காரணமாக, பாகிஸ்தானில் நிலவுவது போன்ற ஒரு சூழல் இந்தியாவில் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.'
மேலும் இந்தியாவுடனான ஈரானின் நீண்டகால நட்பு ரீதியான உறவு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு மட்டும் ஒரு சிறப்பு விலக்காக அந்தப் பாதை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணாமாக தற்போது வரை இந்தியாவில் விலையேற்றம் ஏற்படவில்லை..
