
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தவெக அரசு பயணித்து வரும் நிலையில், ஆளும் அரசின் பெயரை பயன்படுத்தி பெரும் மோசடியில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மற்றும் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. கேஷ்பே என்ற போலி கிரிப்டோகரன்சி மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் அரவிந்தை, கடந்த ஆண்டு புதுச்சேரி காவல்துறை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், மீண்டும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக கோவை மற்றும் சென்னையில் உள்ள பார், பப் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அரவிந்த் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்களை போதைக்கு அடிமையாக்குதல், பிளாக்மெயில் செய்தல் உள்ளிட்ட கடுமையான புகார்களும் முன்வைக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்திலும் அவர் ஈடுபட்டு வருவதாகவும், தனக்கு ஆளும் கட்சி மற்றும் முக்கிய நபர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை முன்வைத்துள்ள தவெக அரசுக்கு, இந்த விவகாரம் தற்போது முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போதைப்பொருள் தடுப்புக்காக சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய புகார்கள் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. அரவிந்த் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா? கோவை, சென்னைக்கு போதைப்பொருட்கள் எப்படி வருகிறது? கிரிப்டோ மோசடி மற்றும் சூதாட்டத்தின் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பதற்கெல்லாம் விசாரணை மூலம் தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய எதிர்பார்ப்பு. தவெக அரசு ‘போதையில்லா தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
