24 special

கையேந்திய வங்கதேசம்... கைகொடுத்த பாரதம் இதுதான் இந்தியாவின் பவர்

PMMODI,TARIQUERAHMAN
PMMODI,TARIQUERAHMAN

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தற்போது கடுமையான எரிசக்தி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், தனது எரிபொருள் இருப்பை மேம்படுத்தவும், மின் உற்பத்தித் தடையைத் தவிர்க்கவும் இந்தியாவிற்கு அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக வரும் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் கூடுதலாக 50,000 மெட்ரிக் டன் டீசலை உடனடியாக வழங்க வேண்டும் என அந்நாடு கோரியுள்ளது. 


வங்கதேசத்தில் கடந்த காலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள், ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் இந்தியாவிற்கு எதிராக அந்நாட்டின் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும் பரப்பிய எதிர்மறையான விமர்சனங்கள் இந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் வங்கதேசத்தின் நிதியமைச்சர் அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி, கடந்த மார்ச் 9 ஆம் தேதி இந்திய உயர் ஆணையர் பிரணய் வர்மாவைச் சந்தித்தபோது, நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலை விளக்கி இந்த உதவியைக் கோரினார். மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விவசாயத் தேவைகளுக்கு வங்கதேசம் பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியையே நம்பியுள்ளது. சமீபத்திய ஈரான் தொடர்பான போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, எரிபொருளின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. 

இதனால் அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு, உள்நாட்டில் மின் தட்டுப்பாடும் தலைதூக்கியுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், "உடனடியாகத் தேவை" என்ற வங்கதேசத்தின் குரலுக்கு இந்தியா நேசக்கரம் நீட்டியுள்ளது. மத்திய அரசு வட்டாரங்களின் தகவல்படி, வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 5,000 மெட்ரிக் டன் டீசல் மார்ச் 10 ஆம் தேதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 45,000 மெட்ரிக் டன் டீசல் குறித்தும் இந்தியா  பரிசீலித்து வருவதோடு, இதற்கான விநியோக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. 

ஒரு பக்கம் பாகிஸ்தான் கடும் பொருளாதார மற்றும் எரிசக்தி சரிவைச் சந்தித்து வரும் வேளையில், மறுபக்கம் வங்கதேசமும் இந்தியாவை நம்பியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியையும், அண்டை நாடுகளுக்குத் துயரக் காலங்களில் உதவும் "முதலில் அண்டை நாடு" என்ற கொள்கையின் வலிமையையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாட்டினால் வங்கதேசத்தின் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் இருந்த நிலையில், இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கை அந்நாட்டு மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியா-வங்கதேசம் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதுடன், இக்கட்டான சூழலில் ஆசியாவின் ஒரு பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா தனது பொறுப்பைச் சரியாகச் செய்து வருவதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது.