
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பஹவல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்தத் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதலை தொடங்கியது. 9 நிலைகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்துள்ளது. இதற்கு பெரிதும் உதவியது ஸ்பெஷல் ட்ரோன்தான். இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் ஸ்பெஷல் ஆயுதம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது இந்திய ராணுவம் பயன்படுத்திய ஸ்பெஷல் ட்ரோன் 'Loitering Munitions' எனும் வகையை சேர்ந்தது. இவை சூசைட் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ட்ரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் எனில் எதிரிகளால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், இந்த வகை ஆயுதங்களை கண்டுபிடிப்பது கஷ்டம். இது பார்க்க ட்ரோன் போல இருந்தாலும் இது ட்ரோன் லிஸ்ட்டில் வராது. காரணம் இது மிக எளிமையான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
ஒரு கேமரா, கொஞ்சம் வெடிப்பொருள். அவ்வளவுதான் இதன் உள்ளடக்கமே! இலக்கை இது தானாக முடிவு செய்து தாக்கும் திறன் கொண்டதாகும். கார், வீடு, கட்டிடத்தின் குறிப்பிட்ட இடம், பெரிய பீரங்கி என குறிப்பிட்ட இலக்கை நாம் இதில் உள்ளீடு செய்ய வேண்டும். குட்டி விமானம் போல இருக்கும் இது, வானில் பறந்து இலக்கை அடையாளம் கண்டு தானாகவே தாக்கும். மலை பகுதியில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டும் தாக்க இது பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சம் 2 மணி நேரம் வரை இது பறக்கும்.
இதை தடுப்பதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். ட்ரோனின் விலை மலிவானது. இதை தடுக்க பயன்படுத்தும் ஆயுதத்தின் விலை பல மில்லியன் டாலர் வரை இருக்கும். எனவேதன் இது எதிரிகளுக்கு தலைவலியாக இருக்கிறதுபாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் இது பயன்படுத்தப்பட்டதற்கான காரணம், இலக்குகளை துல்லியமாக தாக்க வேண்டும் என்பதுதான். ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லக்ஷர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகளின் குடியிருப்பை மட்டும் குறிப்பிட்டு தாக்குதவதற்கு இந்த ஆளில்லா விமானங்கள்தான் சரியான ஆப்ஷன். மற்ற ஆயுதங்கள் எனில் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுமக்கள் சிலர் உயிரிழக்கலாம். எனவேதான் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த முறை விமானப்படை விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவ வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படித்தான் அபிநந்தன் எனும் வீரர் அங்கு சிக்கினார். இந்த முறையும் இதுபோன்ற தவறுகள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிக கவனமாக இருந்தது. ட்ரோன்களை பயன்படுத்த இதுவும் முக்கியமான காரணமாகும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எங்கிருந்து கண்காணித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமர் மோடி இரவு முழுவதும் முப்படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் முப்படை அதிகாரிகளுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்திய பிரதமர் மோடி, நேற்று முழுவதும் பல கூட்டங்களை நடத்தினார். அதன்படி, முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது