24 special

திடீர் விசிட்... திட்டமிட்ட ஸ்கெட்ச், மேக்ரான் வந்ததும்... உலக அரசியல் மாறியதும்! ஆயுதச் சந்தையில் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்

PMMODI
PMMODI

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவை வருகை தந்து, மும்பையின் வீதிகளில் ஜாகிங் செய்து, டிஜிட்டல் இந்தியாவின் அடையாளமான  தேநீர் அருந்தி  யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தி மகிழ்ந்த காட்சிகளை நாம் அனைவரும் வியப்புடன் பார்த்தோம். ஆனால், இந்த எளிமையான சந்திப்புகளுக்குப் பின்னால் உலக அரசியலை அதிரவைக்கும் ஒரு மிகப்பெரிய ஜியோபாலிடிக்ஸ் சதுரங்கம் ஒளிந்திருக்கிறது.


தற்போது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் நீண்டகால பனிப்போர் இன்று நேற்றல்ல; குறிப்பாக, அமெரிக்காவின் F35 போர் விமானத்தின் 'சோர்ஸ் கோட்' ரகசியங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததிலிருந்து இந்த மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, ஐரோப்பிய நாடுகள் தங்களின் தற்காப்புத் தேவைகளுக்காகச் சொந்தமாக அடுத்த தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டன. இதில் ஜெர்மனியும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய 100 பில்லியன் யூரோ மதிப்பிலான 'FCAS' திட்டம் ஒருபுறமும், இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஜப்பான் இணைந்த 'GCAP' திட்டம் மறுபுறமும் வேகம் எடுத்தன. இருப்பினும், இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களாலும், தொழில்நுட்பப் பகிர்வில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் GCAP திட்டம் தடுமாறிய நிலையில், அதில் பாரதத்தை இணைக்க முயற்சிகள் நடந்தது 

அதேபோல், பிரான்சும் ஜெர்மனியும் இணைந்த FCAS திட்டத்திலும் முரண்பாடுகள் வெடித்தன. ஆறாம் தலைமுறை போர் விமானத்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வசதி மற்றும் கப்பல்களில் தரையிறங்கும் நுட்பம் வேண்டும் என்பதில் பிரான்ஸ் உறுதியாக இருந்தது. ஆனால், ஜெர்மனி இதற்கு முட்டுக்கட்டை போட்டதோடு, செலவைப் பிரான்ஸ் ஏற்க வேண்டும் ஆனால் அதிகாரம் சமமாக இருக்க வேண்டும் என அடம்பிடித்தது. இந்தச் சூழலில்தான், ரஷ்யாவின் SU57 திட்டத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, இந்தியா தனது சுயசார்பு கொள்கையில் மிகத்தீவிரமாக உழைத்து வருகிறது. ஜப்பானின் அழைப்பை இந்தியா மறுத்ததற்குக் காரணமும், வெறும் முதலீட்டாளராக மட்டுமே இருக்க விருப்பமில்லாததும், தொழில்நுட்ப மாற்றத்தை (Technology Transfer) இங்கிலாந்து ஏற்காததுமே ஆகும்.

இப்போது ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. நிலத்திலும் நீரிலும் செயல்படக்கூடிய, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வல்லமை கொண்ட ரஃபேல் விமானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகப் பிரான்ஸ் தான் இன்று பாரதத்தை நாடி வந்துள்ளது. பல தசாப்தங்களாக ஆட்சி மாற்றங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கும் இந்திய-பிரான்ஸ் நட்பு, ரஃபேல் உற்பத்தியில் 60 சதவீதம் வரை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது, மற்றும் ஏஐ (AI), ரேடார், ட்ரோன் போன்ற தொழில்நுட்பங்களில் இந்தியா படைத்துள்ள அசுர வளர்ச்சி ஆகியவை பாரதத்தை ஒரு தவிர்க்க முடியாத உலக சக்தியாக மாற்றியுள்ளது. குளோபல் சவுத் (Global South) நாடுகளின் ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மையமாக இந்தியா உருவெடுத்து வருவதும் பிரான்சுக்குச் சாதகமான அம்சமாகும். என்ஜின் மற்றும் சோர்ஸ் கோட் விவகாரங்களில் இன்னும் சில ரகசியப் பேச்சுவார்த்தைகள் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கலாம் என்றாலும், வல்லரசு நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் இந்தியாவின் ராணுவ மற்றும் ராஜதந்திர ஆதிக்கம் இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயமாகும்.