
உலக அரசியலில் சில நாடுகள் சத்தம் போடுகின்றன; சில நாடுகள் அமைதியாக நகர்கின்றன. ஆனால் இந்தியா? இன்று உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு, அமைதியோடும் உறுதியோடும் தன் பாதையை செதுக்கி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தனது ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையை தூசி தட்டி எடுத்திருக்கிறார். ஈரான் மற்றும் சில நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு, உலக நாடுகளை பதற வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இது ஒரு மிரட்டலாகவே முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளுடன் இந்த புதிய அறிவிப்பு சேரும்போது, “இந்தியாவுக்கு 75 சதவீத வரி” என்ற வார்த்தைகள் அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக ஒலிக்கின்றன. ஆனால் உண்மையை சொன்னால், இது இந்தியாவை அச்சுறுத்தும் அறிவிப்பா, இல்லை அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலுக்கான நாடகமா என்ற கேள்வி தான் இப்போது முக்கியம்.
இந்தியாவின் ஈரான் உடனான வர்த்தகம் வெறும் 1.68 பில்லியன் டாலர் மட்டுமே. இது இந்தியாவின் மொத்த வர்த்தக அளவில் ஒரு சிறிய துளி. இதை வைத்து இந்திய பொருளாதாரம் முடங்கிவிடும் என கூறுவது, அரசியல் பயமுறுத்தலே தவிர பொருளாதார உண்மை அல்ல. இந்த நிதானமான உண்மையை புரிந்து கொண்டு தான், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எந்த பதட்டமும் காட்டாமல், மிகக் கவனமாக இந்த விவகாரத்தை கையாள்கிறது.
டிரம்ப் ஒருபுறம் வரி ஆயுதத்தை காட்டி அழுத்தம் கொடுக்க, மறுபுறம் அவரது தூதர் செர்ஜியோ கோர் இந்தியா வருகை தருகிறார். “இந்தியா எங்களின் சிறந்த நண்பன்” என்ற வார்த்தைகள், வரி மிரட்டலுடன் சேர்ந்து கேட்கும்போது, அது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் இதுவே டிரம்ப் அரசியலின் அடையாளம். சத்தமாக மிரட்டுவது, பின்னால் அமைதியாக பேசுவது. இந்த இரட்டை வேடத்தை இந்தியா புதிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடந்த கால அரசுகளைப் போல அஞ்சவும் இல்லை.
மோடி ஆட்சிக்கு முன்பு, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பெரும்பாலும் “யாரையும் கோபப்படுத்தக் கூடாது” என்ற மனநிலையிலேயே சிக்கியிருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. இந்தியா அமெரிக்காவுடன் உறவை பேணுகிறது; அதே நேரத்தில் ரஷ்யாவையும் விட்டு விலகவில்லை. ஈரானுடனான உறவையும் துண்டிக்கவில்லை. வளைகுடா நாடுகளுடன் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துகிறது. இதுதான் ‘ஸ்ட்ராடஜிக் ஆட்டோனமி’ தன்னாட்சி கொண்ட வெளிநாட்டு கொள்கை.
அமெரிக்கா வரி விதிக்கிறது என்றால், அது எல்லா பொருட்களுக்கும் பொருந்தாது என்பதே முக்கியமான உண்மை. அமெரிக்காவுக்கே தேவையான பல துறைகளில், அந்த நாடே விலக்கு அளிக்கிறது. கை முரண்பாடுகள் என பல விஷயங்களில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து மெதுவாக விலகும் மனநிலையில் உள்ளன. இந்த சூழலில், இந்தியா ஒரு மாற்று சக்தியாக, ஒரு நம்பகமான பெரிய சந்தையாக உலகிற்கு தோன்றுகிறது. 140 கோடி மக்கள், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், டிஜிட்டல் பொருளாதாரம்—இவை அனைத்தையும் எந்த அமெரிக்க பெருநிறுவனமும் புறக்கணிக்க முடியாது.
அதனால் தான், டிரம்ப் எத்தனை முறை மிரட்டல் வார்த்தைகள் பேசினாலும், பின்னணியில் அமெரிக்க தூதர்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது இந்தியாவின் பலம். இது மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர வெற்றி.மிரட்டல்களுக்கு பணிந்து தலையாட்டும் இந்தியா இன்று இல்லை. உலக அரசியலில் தன் நலனை தானே தீர்மானிக்கும், தன் பாதையை தானே வகுக்கும் ஒரு புதிய இந்தியா உருவாகியுள்ளது.
