
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் போதெல்லாம், ஆளும் தரப்பு தனக்கு எதிரான விமர்சனங்களை திசைதிருப்ப "தனிநபர் விமர்சனம்" மற்றும் "திசைதிருப்பும் அரசியலை" கையில் எடுப்பது ஒரு நீண்டகால யுக்தியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள , நடிகர் விஜய் மீது விழுந்துள்ள இந்த விவாகரத்து தொடர்பான செய்திகள், தற்செயலானவை என்று கடந்து போக முடியாத அளவிற்கு அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகத் தெரிகின்றன. டிசம்பர் மாதமே போடப்பட்ட ஒரு வழக்கு, சரியாக தேர்தல் நெருங்கும் வேளையிலும், விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தும் போதும் வெளியாவது என்பது, ஆளும் திமுக அரசின் "நிழல் யுத்தத்தின்" ஒரு பகுதியாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
திமுக அரசுக்கு எதிரான மக்கள் கொந்தளிப்புகள் எழும்போதெல்லாம், அதைச் சமாளிக்க ஒரு புதிய சர்ச்சையை உருவாக்குவது அவர்களின் வாடிக்கை. அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) கசிந்த விதம் இதற்கு ஒரு சான்று. ஒரு பெண்ணின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் சார்ந்த விஷயத்தில் கூட, அரசியல் லாபத்திற்காகத் தகவல்களைக் கசியவிடுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல. அதேபோல், கோவையில் ஒரு பெண் சீரழிக்கப்பட்ட துயரமான சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே பழியைச் சுமத்தும் வகையில், "அந்த நள்ளிரவில் அங்கே அவர்களுக்கு என்ன வேலை?" என்று சமூக வலைதளங்களில் திமுக ஆதரவு வட்டாரங்களால் பரப்பப்பட்ட கருத்துகள் அதிர்ச்சியளிப்பவை. ஒரு குற்றத்தைப் பாதுகாப்பதை விட, பாதிக்கப்பட்டவர்களைக் களங்கப்படுத்துவதன் மூலம் அரசின் தோல்வியை மறைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
இப்போது அதே யுக்தி விஜய் மீதும் பாய்ந்துள்ளது. சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்படும் மனுவில் உள்ள தகவல்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், அவரது அரசியல் பிம்பத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. திருமணத்திற்கு மீறிய உறவு போன்ற குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் கசிய விடுவதன் மூலம், ஒரு தலைவனுக்குத் தேவையான ஒழுக்கப் பண்புகள் அவரிடம் இல்லை என்று மக்கள் மனதில் விதைக்க திமுக அரசு முயல்கிறது. பொதுவாக, இத்தகைய ரகசியமான மனுக்கள் நீதிமன்ற ஆவணக் காப்பகத்திலிருந்து ஒரு சாமானியருக்குக் கிடைப்பது கடினம். அப்படியிருக்க, இது ஊடகங்களுக்குச் சென்றது எப்படி என்ற கேள்வி, இதன் பின்னணியில் உள்ள அதிகார பலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.
தற்போது திமுகவுக்கு எதிராக அலை வீசும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் காங்கிரசை தக்க வைக்க போடப்பட்ட பிளான் தான் என்கிறது அறிவாலய வட்டாரங்கள் . ஏப்ரல் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு வரும் வரை காத்திருந்து, அதைச் சரியாகத் தேர்தல் வியூகங்களுக்குப் பயன்படுத்த திமுக நினைக்கிறது. ஒருபுறம் குடும்பப் பிரச்சினை என்று சொல்லி அனுதாபம் தேட விடாமல், மறுபுறம் ஒழுக்கக் கேடு என்று முத்திரை குத்தி அவரை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இதனை முறியடிக்க விஜய் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுவது, இந்தத் தீய நோக்கத்தைச் முறியடிப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது.
அரசியல் ரீதியாக யாரையும் எதிர்கொள்ளத் துணிவில்லாத அரசியல் கட்சி என்றால் அது திமுக தான் அவர்களின் தோல்வியை மறைக்க தனிநபர் தாக்குதலில் இறங்கிவிடுவார்கள். மேலும் , அவரது , குடும்பச் சிக்கல்களையும் வீதிக்குக் கொண்டு வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு அடையாளமல்ல. திமுக அரசு தன் மீதான ஊழல் புகார்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் தேர்தல் வாக்குறுதி மீறல்களை மறைக்க, இத்தகைய தனிநபர் தாக்குதல்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
