
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அந்த ஒற்றைக் கேள்வி, திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பலவீனத்தை ஊர் உலகிற்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. "கடந்த ஆண்டு 'சகோதரர்' என்று உருகிய ராகுல், இந்த ஆண்டு ஏன் அந்தப் பாசத்தைத் தவிர்த்தார்?" என்று அண்ணாமலை கிளப்பிய சந்தேகம், வெறும் அரசியலல்ல; அது திமுகவின் ஆதிக்க அரசியலுக்கு விழுந்த பலமான சாட்டை அடி. எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கும் அளவுக்கு ஒரு சாதாரண வாழ்த்துப் பதிவில் கூட ராகுல் காந்தி இடைவெளியைக் கடைப்பிடிப்பது, திமுகவின் 'பெரியண்ணன்' தோரணைக்குக் கிடைத்த முதல் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளளன நேற்று ஒட்டுமொத்த திமுகவினரும் ராகுல் காந்தியிடம் இருந்து ஒரு நெகிழ்ச்சியான வாழ்த்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், வந்ததோ வெறும் "அரசியல் சடங்கு". "தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" - இதில் எங்கே போனது அந்த பழைய நெருக்கம்? எங்கே போனது அந்த 'ப்ரோ' பாசம்? திமுகவின் அடக்குமுறை அரசியலால் காங்கிரஸ் மேலிடம் எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரி வாழ்த்து உணர்த்துகிறது. அண்ணா அறிவாலயத்தின் அதிகார மிரட்டல்கள் இனி டெல்லியில் செல்லுபடியாகாது என்பதற்கான 'மௌனச் சாட்சி' தான் இந்தச் சொல் மாற்றம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவின் நிழலில் ஒதுங்கி, அக்கட்சியின் "பி-டீம்" போலச் செயல்படுகிறார் என்ற விமர்சனம் சத்தியமூர்த்தி பவனையே துளைத்துக்கொண்டிருந்தது. "செல்வப்பெருந்தகையின் மென்மையான போக்கு காங்கிரஸை அழித்துவிடும்" என்று தொண்டர்கள் குமுறிய நிலையில், களத்தில் குதித்தார் கிரிஷ் சோடாங்கர். திமுகவின் தொகுதிப் பங்கீட்டு மிரட்டல்களைத் துச்சமாக மதித்து, அவர் காட்டும் அந்த 'கெத்து' அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது. "25 சீட் கொடுத்து எங்களை அடக்க நினைக்காதீர்கள், எங்களுக்கும் வழி இருக்கிறது" என சோடாங்கர் போட்ட 'போடு', திமுகவை இப்போது தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.
இப்போது அரசியல் வட்டாரங்களில் தீயாகப் பரவி வரும் சஸ்பென்ஸ் - நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK) காங்கிரசுக்கு விரித்துள்ள அந்த 'மெகா ஆஃபர்' தான். திமுக தரும் சொற்பத் தொகுதிகளை விட, விஜய் தரப்பில் பேசப்படும் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளும், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்ற அதிரடி வாக்குறுதியும் காங்கிரஸின் டெல்லி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. ராகுல் காந்தியின் வாழ்த்தில் தெரிந்த அந்த 'அரசியல் விவாகரத்து' அறிகுறி, உண்மையில் விஜய்யுடன் கை கோர்ப்பதற்கான முன்னோட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவின் பிடியில் இருந்து விடுபட்டு, விஜய்யின் புதிய எழுச்சியோடு கைகோர்க்க காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதே தற்போதைய 'ஹாட்' நியூஸ்!
அறிவாலயத்தின் அகங்காரமும், கூட்டணிக் கட்சிகளை அடிமைகளாக நடத்தும் போக்கும் அந்தப் பேரியக்கத்தின் அஸ்திவாரத்தைச் சரித்துவிட்டது. அண்ணாமலையின் விமர்சனம் முதல் ராகுலின் மௌனம் வரை அனைத்தும் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான்: திமுகவின் காலம் முடியப்போகிறது. செல்வப்பெருந்தகையின் இயலாமையை ஓரம் தள்ளிவிட்டு, கிரிஷ் சோடாங்கர் வகுக்கும் புதிய வியூகங்கள், காங்கிரஸை விஜய்யின் பக்கம் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. 2026-ல் திமுகவின் கோட்டையைத் தகர்க்கப் போவது வேறு யாரும் இல்லை; அவர்கள் இத்தனை காலம் 'தம்பி' என்று முதுகில் தட்டிக் கொடுத்து ஏமாற்றிய அதே காங்கிரஸும், விஜய்யும் தான்!
