24 special

யாரும் எதிர்பாராத காலை 9 மணி .. மொசாத்தின் மாஸ்டர் பிளான்... கொமேனி வீழ்த்தப்பட்டது எப்படி? கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்

DONALDTRUMP,BENJAMINNETANYAHU
DONALDTRUMP,BENJAMINNETANYAHU

வளைகுடா பிராந்தியத்தில் தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்கள் ஒருமித்த குரலில் மிக முக்கியமான எச்சரிக்கைச் செய்தியை விடுத்துள்ளன. எக்காரணம் கொண்டும் அரசு அலுவலகங்கள், ராணுவ முகாம்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


ஈரானியத் தலைவர் கொமேனி மற்றும் அவரது உயர்மட்டக் குழுவினர் கொல்லப்பட்ட விதம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இப்போது கசியத் தொடங்கியுள்ளன. பாலஸ்தீன இயக்கத் தலைவரின் கொலையிலேயே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் ஊடுருவல் எந்தளவுக்கு ஆழமானது என்பது நிரூபணமானது. தற்போது கொமேனியின் மரணத்திலும் அதுவே பிரதிபலிக்கிறது. பொதுவாக இத்தகைய முக்கியத் தலைவர்கள் இரவில் இலக்கு வைக்கப்படுவார்கள். ஆனால், பழமைவாத முல்லாக்களின் வழக்கப்படி மாலை 6 மணிக்கு மேல் கதவுகளை அடைத்துக் கொண்டு மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகே வெளியே வரும் பழக்கம் கொண்ட கொமேனியின் அன்றாட நடவடிக்கைகளை மொசாத் மிகத் துல்லியமாகக் கண்காணித்தது. அவர் காலை 9 மணியளவில் ஆலோசனைக்கு வருவார் என்ற தகவலைத் திரட்டி இஸ்ரேல் ராணுவத்திற்குத் தந்தது. அமெரிக்கத் தரப்பு ஈரானின் வான் பாதுகாப்புச் சாதனங்களை முடக்கிய அதே நேரத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொமேனியும் அவரது உயர்மட்டத் தளபதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தத் திடீர் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்து போனது. தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால், எப்படிப் பதிலடி கொடுப்பது என்பதில் ஈரானியத் தரப்பில் பெரும் குழப்பம் நிலவியது. தற்போது அவர்கள் தாக்குதலைத் தொடங்கியிருந்தாலும், அது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உக்கிரமாக இல்லை என்பதே உண்மை. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டாலும், அவற்றின் சிதறிய பாகங்கள் ஆங்காங்கு விழுந்துள்ளன. அமெரிக்காவின் பிரம்மாண்டமான 'ஆப்ரஹாம் லிங்கன்' விமானந்தாங்கி கப்பல் மீதான தாக்குதல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. உரியப் பாதுகாப்பு கவசங்கள் இன்றி இவ்வளவு பெரிய கப்பல் ஈரான் எல்லை வரை வராது என்பதை அமெரிக்கா மீண்டும் நிரூபித்துள்ளது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, ஈரான் ஏவிய பல ஏவுகணைகளை அது தடுத்து நிறுத்தியுள்ளது. இருப்பினும், வளிமண்டலத்தைத் தாண்டி அதிவேகமாக வந்த சில ஏவுகணைகளால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரானைப் பொறுத்தவரை கொமேனி என்பவர் கடவுளின் தூதராகக் கருதப்பட்டவர், எனவே அவரைப் இழந்த ஆத்திரத்தில் அவர்கள் பெரிய ஆட்டம் ஆடத்தான் செய்வார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். "ஆப்பரேஷன் கர்ஜிக்கும் சிங்கம்" (Operation Grabbing Lion) எனும் பெயரில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்கிறது. "முல்லாக்களின் ஆட்சி மீண்டும் அமைய அனுமதிக்க மாட்டோம், மக்கள் விரும்பும் மாற்று ஆட்சி அமைந்து எங்களுக்கான அச்சுறுத்தல் நீங்கும் வரை ஓயமாட்டோம்" என்று நெதன்யாகு சவால் விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்த மோதல் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கிய வடகொரியாவின் தயாரிப்புகள் இஸ்ரேலிய வான் பாதுகாப்பை மீற முடியாமல் திணறுவதைக் காண முடிகிறது. 100-ல் ஒரு ஏவுகணை மட்டுமே இஸ்ரேலுக்குள் நுழைகிறது. ஆனால், கடந்த மே மாதம் இந்தியா மீது ஏவப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகள் எவையுமே இந்திய எல்லைக்குள் நுழைய முடியவில்லை என்பது இந்திய வான் பாதுகாப்பின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. இனிவரும் நாட்களில் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்களையே அழிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயன்படுத்த வாய்ப்புள்ளது.