
ஈரானின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி, சரிந்துள்ளது இது உலா க அரசியலில் வெறும்மாற்றம் மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்ட பல்லாயிரம் ஆன்மாக்களின் அமைதிப்பலி. ஒரு ஆட்சியாளன் தன் சொந்த நாட்டு மக்களையே ஈவிரக்கமின்றி அழிக்கும்போது, அந்த மண்ணின் மரண ஓலங்கள் காலப்போக்கில் ஒரு பெரும் புயலாக மாறும் என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
கமேனியின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனைகள் என்பவை வெறும் சட்ட நடைமுறைகள் அல்ல, அவை அச்சத்தை விதைக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. வயது வித்தியாசம் பாராமல், பிஞ்சு உள்ளங்கள் முதல் முதியவர்கள் வரை தூக்குக்கயிற்றில் தொங்கவிடப்பட்டனர். ஒரு மகளின் கண்முன்னே அவளது தகப்பனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுவதையும் இருளாக்கிய கொடூரம் அரங்கேறியது. அதேபோல், ஒரு தந்தையின் கண்களுக்கு முன்னாலேயே அவரது மகனுக்கும் மகளுக்கும் தண்டனை வழங்கி, ஒரு குடும்பத்தையே சிதைத்த கொடுமைகள் ஈரானின் வீதிகளில் மௌனமாக உறைந்து கிடக்கின்றன. எத்தனையோ பேர் உயிர் பிச்சை கேட்டு சமர்ப்பித்த கருணை மனுக்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், காலில் போட்டு மிதித்த அதிகார மதம் கமேனியிடம் இருந்தது. பல தசாப்தங்களாக வலியை அனுபவித்த ஈரானிய மக்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்துவிட்டு, அதிகாரத்தின் உச்சியில் அவர் அமர்ந்திருந்தார். ஜனநாயகத்தின் சுவாசத்தை ஈரான் மக்கள் உணரவே கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், உலக நாடுகள் கொண்டாடும் ஜனநாயக உரிமைகளை ஈரானில் ஊறுகாய்க்குக்கூட இல்லாமல் ஆக்கினார்.
இதன் விளைவாகவே, இன்று ஒரு ஈரானியப் பெண் "எங்கள் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது" என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாள். இது ஒரு தனிமனிதப் பெண்ணின் மகிழ்ச்சி அல்ல, பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தக் குரல். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 'நம்பர் 1' எதிரியாகக் கருதப்பட்ட கமேனியை, அவரைச் சுற்றியுள்ள 14 முஸ்லீம் நாடுகளும் இன்று ஒரு ஆபத்தான எதிரியாகவே பார்க்கின்றன. அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் ஈரானைத் தாக்கத் தொடங்கியபோது, மற்ற இஸ்லாமிய நாடுகள் கவலை கொள்ளாமல் அமைதி காத்ததுடன், உள்ளுக்குள் அந்தத் தாக்குதலை ஒரு விடுதலையாகவே பார்த்தன. ஈரான் தன் அண்டை நாடுகளான துபாய், அபுதாபி, பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளின் வர்த்தக மையங்களையும் விமான நிலையங்களையும் இலக்கு வைத்தது, அந்த நாடுகளுடனான உறவை முற்றாகச் சிதைத்தது. குறிப்பாகச் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளைத் தாக்கி அழித்த செயல், இஸ்லாமிய நாடுகளுக்குள்ளேயே ஈரானைத் தனிமைப்படுத்தியது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அரண் மட்டும் இல்லாதிருந்தால், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நவீன நகரங்கள் ஈரானின் ஏவுகணைகளால் இந்நேரம் தரைமட்டமாகிப் போயிருக்கக்கூடும். இந்த ஆக்கிரமிப்பு மனநிலை மற்றும் சொந்த மதத்தினர் மீதே தொடுத்த தாக்குதல்கள் கமேனியை மத்திய கிழக்கில் ஒரு அநாதையாக மாற்றியுள்ளது. இன்று ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் ஈரானுக்கு எதிராகத் திரும்பிவிட்டன. முப்பது ஆண்டுகால ஏதேச்சதிகார ஆட்சி இன்று சரிந்து கொண்டிருப்பது, உலக அரசியலில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும். அதிகார பலத்தாலும் ராணுவத்தாலும் மக்களை அடக்கிவிடலாம் என்று நினைத்த கமேனிக்கு, காலம் இன்று தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. இயற்கை யாரையும் விட்டுவைப்பதில்லை; அநீதி இழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு ஏவுகணையாக மாறி இன்று அதிகார வர்க்கத்தைத் தகர்த்தெறிகிறது. ஈரானின் இந்த மாற்றம், உலகளாவிய புவிசார் அரசியலில் புதிய விடியலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
