24 special

ரஷ்யா டூ அரேபியா 30 நாடுகளை வளைத்த மோடி! இந்தியாவின் தயவு இன்றி எதுவும் நடக்காது இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்

PMMODI,TARIQUERAHMAN
PMMODI,TARIQUERAHMAN

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து, உலகளாவிய விநியோகச் சங்கிலி நிலைகுலைந்து போயிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த உலகமே எரிபொருளுக்காகவும் உரத்திற்காகவும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே தங்களின் அடுத்தகட்ட நகர்வை அறியாமல் திகைத்து நிற்கும் இந்தச் சூழலில், அண்டை நாடான வங்காளதேசம் தனது இருப்புக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டுள்ளது. "ப்ளீஸ்! எங்களுக்குப் பத்தல; இன்னும் அதிகமாகத் தாங்க" என்று டீசல் மற்றும் உர விநியோகத்தை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ள செய்தி, சர்வதேச அரசியலில் இந்தியாவின் அசைக்க முடியாத இடத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.


புது தில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரைச் சந்தித்த வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலீலுர் ரஹ்மான், இந்தியாவின் தாராள மனப்பான்மையை வெகுவாகப் பாராட்டினார். இந்தியாவின் சமீபத்திய டீசல் விநியோகம் வங்காளதேசத்தின் இருண்ட பகுதிகளில் ஒளியேற்றியுள்ளதை நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். அமைச்சர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு அரணான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது, இந்த விவகாரம் வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல, இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை சார்ந்தது என்பதையும் உணர்த்துகிறது.

உலகமே கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் போது, இந்தியா மட்டும் எப்படி இவ்வளவு நிதானமாகவும், வலிமையாகவும் இருக்கிறது என்பதுதான் இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய ஆச்சரியம். உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்று, இந்தியாவின் எரிசக்தித் தேவையை ஒரு சொட்டு கூட குறையாமல் பார்த்துக் கொள்வது சாதாரணமான காரியம் அல்ல. இது பிரதமர் நரேந்திர மோடியின் அபாரமான ராஜதந்திரத்திற்குச் சான்றாகும். உக்ரைன்-ரஷ்யா போராக இருந்தாலும் சரி, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலாக இருந்தாலும் சரி, உலக அரங்கில் யார் யாருடன் மோதினாலும் இந்திய மக்களின் நலன் பாதிக்கப்படாதவாறு இரும்புக்கரத்துடன் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்தியாவின் இந்த ஆளுமைதான், இன்று அண்டை நாடுகளை உதவிக்காக இந்தியாவை நோக்கித் திரும்ப வைத்துள்ளது.

மற்ற நாடுகளில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டு, மக்கள் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை நிலவுகிறது. ஆனால் இந்தியாவில், ஒருபுறம் நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு, மறுபுறம் தன்னை நம்பி வந்த அண்டை நாடுகளுக்கு "உடனடியாகவும் சாதகமாகவும்" உதவத் துணியும் தைரியம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது.