
ஒரு காலத்தில் உலக நாடுகளிடம் உதவி கேட்ட இந்தியா, இன்று போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணமாக பாலஸ்தீனம் இந்தியாவை நாடியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உலக அரங்கில் வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில், மனிதாபிமானத்தின் உச்சமாய் இந்தியா இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. போர் மேகங்கள் சூழ்ந்து, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, காசா மற்றும் பாலஸ்தீன நகரங்கள் ஒட்டுமொத்தமாய் நிலைகுலைந்து நிற்கும் இந்த இக்கட்டான சூழலில், ஒட்டுமொத்த உலகமே மௌனம் காக்கும் போது, இந்தியாவின் பக்கம் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் திரும்பியிருக்கிறது. "இந்தியாவும் இந்திய மக்களாலும் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?" என்று பாலஸ்தீன தூதரகம் கண்ணீரோடு விடுத்த உருக்கமான கோரிக்கை, உலக அரங்கில் இந்தியாவின் அசைக்க முடியாத பலத்தையும் அதன் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் சீர்குலைந்து, மக்கள் அன்றாட உணவிற்கும் அவசர மருத்துவத்திற்கும் கையேந்தி நிற்கும் நிலையில், இந்தியாவின் ‘ஆரோக்கிய மைத்ரி’ (Aarogya Maitri) திட்டமே தங்களைக் காக்கும் ஒரே கவசமாக பாலஸ்தீனம் நம்புகிறது. இயற்கை பேரிடர்களோ அல்லது மனிதாபிமான நெருக்கடிகளோ, எந்த ஒரு வளரும் நாடு பாதிக்கப்பட்டாலும் இந்தியா ஓடோடி வந்து உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி உலகிற்கு கொடுத்த வாக்குறுதி, இன்று பாலஸ்தீனத்தின் ஆகச்சிறந்த நம்பிக்கையாக மாறியுள்ளது.
போர் தீவிரமடைந்த காலத்திலிருந்து பாரபட்சமின்றி, இதுவரை 135 மெட்ரிக் டன் எடையுள்ள உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளையும், பேரிடர் கால நிவாரணப் பொருட்களையும் இந்திய விமானப்படையின் பிரம்மாண்ட சி-17 விமானங்கள் மூலம் இந்தியா தொடர்ந்து அனுப்பி வைத்து, தன் மனிதாபிமானக் கொள்கையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. இது வெறும் உதவி அல்ல; சர்வதேச அரசியலில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆளுமைக்கும், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற ஒட்டுமொத்த உலகையும் ஒரு குடும்பமாகப் பார்க்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் சான்றாகும். வல்லரசு நாடுகள் கூட தங்களின் சுய லாபங்களுக்காகத் தயங்கி நிற்கும் வேளையில், தவித்துக் கொண்டிருக்கும் மனித உயிர்களைக் காக்க இந்தியாவின் அசாத்திய வெளியுறவுக் கொள்கையும், பிரதமர் மோடியின் துணிச்சலான ஆளுமையும் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது. உலக நாடுகளின் தலைவனாய், உலகமே தவிர்க்க முடியாத ஒரு பெரும் சக்தியாய் இந்தியா இன்று கம்பீரமாக உருவெடுத்து நிற்பதை இந்த நிகழ்வு ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
அது மட்டுமில்லாமல் பாலஸ்தீன அகதிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் முகமைக்கு இந்திய அரசு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பாலஸ்தீன அகதிகளுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கி வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கி வருகிறது!
