
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு சிபிஐ அதிகாரிகள் 3 பேர் நேற்று சென்றனர். அப்போது பிரச்சார வாகன கேமரா பதிவுகளைக் கேட்டு சம்மன் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள், நேரடி சாட்சிகள், பல்வேறு துறை அதிகாரிகள் என இதுவரை மொத்தம் 306 பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் தொடர்ந்து, கரூர் சுற்றுலா மாளிகையில் நேற்று 2-வது நாளாக வேலுசாமிபுரத்தில் பேக்கரி வைத்திருப்பவர், கேட்டரிங் கல்லூரி வைத்திருப்பவர் உள்ளிட்ட சம்மன் அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 மாஜிஸ்திரேட் பரத்குமாரை சிபிஐ அதிகாரிகள் சந்தித்தனர். 3 பேர் அடங்கிய குழு கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்பில் பணியாற்றி வரும், கரூர் காமராஜபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரிடம் விசாரணை நடத்த நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, அவர் சென்னையில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் சிபிஐ இன்ஸ்பெக்டர் பெனிக் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை பனையூரில் உள்ள தவெகவின் அலுவலகத்துக்கு நேற்று சென்ற சிபிஐ அதிகாரிகள், விஜய்யின் பிரச்சார வாகனத்தில் உள்ள கேமரா பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை அளிக்குமாறு இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமாரிடம் கேட்டு சம்மன் கொடுத்ததாகவும், அவற்றை 3 நாட்களில் அளிப்பதாக அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ராம்குமார் எங்கு உள்ளார் என்ற விவரத்தையும் அவரிடம் கேட்டதாகத் தெரிகிறது. நிர்மல்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் ராம்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே, சிபிஐ உதவி கண்காணிப்பாளர் முகேஷ்குமார், ஆய்வாளர் மனோகரன் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகியோர் ஆவணங்களுடன் கரூர் குற்றவியல் நீதிமன்ற முதலாவது நீதிபதியை சந்தித்தனர். நீதிபதியின் தனி அறையில் சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை கேட்பதற்காகவும், ஆவணங்களை சரி பார்ப்பதற்காகவும் சிபிஐ அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சாட்சியங்களை சுற்றுலா மாளிகைக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வேலுச்சாமிபுரத்தில் உள்ள பேக்கரி கடை உரிமையாளர், இ-சேவை மைய உரிமையாளர், எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதில் பல்வேறு ஆதரங்கள் கிடைத்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக மர்மநபர்கள் இறங்கினார்களா எனவும் விசாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் சி.பி.ஐ தாக்கல் ஆதாரங்களை தாக்கல்  செய்யும் என கூறியுள்ளது திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது.
