24 special

தங்கம் விவகாரத்தில் எடுத்த திடீர் முடிவு! இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஆடிப்போன உலக நாடுகள்

PMMODI,XIJINPING
PMMODI,XIJINPING

தங்கம் விற்பனை தொடர்பான வரி விலக்குகளை சீனா ரத்து செய்துள்ள நிலையில், இது இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தங்கம் நுகர்வோர்களாக இந்தியா மற்றும் சீனா இருப்பதால், இந்த மாற்றம் உலகளாவிய தங்கச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவின் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 1 முதல் தங்க விற்பனையாளர்கள் இனி ஷாங்காய் கோல்ட் எக்ஸ்சேஞ்சிலிருந்து வாங்கும் தங்கத்திற்கான மதிப்புக்கூட்டப்பட்ட வரியை (VAT) ஈடுசெய்ய முடியாது. அதாவது முன்பு தங்கம் வாங்கும் போது அவர்கள் வரி கட்டி இருப்பார்கள். ஆனால் விற்கும் போது வரி கட்ட வேண்டியது இல்லை.


இனிமேல் விற்கும் போதும் வரி கட்ட வேண்டும். அதாவது இரண்டு முறையும் வரி கட்ட வேண்டி இருக்கும். இந்த விதி, நகைகள், நாணயங்கள், உயர் தூய்மையான கட்டிகள் அல்லது தொழில்துறை பொருட்கள் என அனைத்து வகையான தங்கத்திற்கும் பொருந்தும்.

தங்கத்தின் விலைகள் அதிகரித்து வரும் சூழலில், சீனாவின் இந்த நடவடிக்கை உலக சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சீனாவில் தங்கத்தின் தேவை குறைந்து, உலகளாவிய தங்க விலைகள் குறைந்தால், இந்தியா மலிவான தங்கத்தை இறக்குமதி செய்ய ஒரு வாய்ப்பை பெறும்.

சீனாவில் வரி விலக்குகள் ரத்து செய்யப்படுவதால், அங்கு தங்கத்தின் விலை உயரக்கூடும். இது சில்லறை விற்பனையாளர்களையும் நுகர்வோரையும் இந்தியா, ஹாங்காங் அல்லது சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளின் சந்தைகளில் உள்ள விலை வேறுபாடுகளை ஆராய தூண்டும். இது சர்வதேச தங்க வர்த்தகத்திலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். சீனாவின் இந்த செயல் காட்டு யானையை.. கட்டவிழ்த்துவிட்டது போல தங்கத்தின் விலையை மாற வைக்கும்.

சீனாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்தால், இந்தியா மற்றும் பிற பிராந்திய சந்தைகள் உலகளாவிய தங்க வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெறலாம். இந்தியாவின் பெரும்பாலான தங்கத் தேவை இறக்குமதிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதால், குறைந்த தங்க விலைகள் இறக்குமதி செலவுகளை குறைத்து, ரூபாயை பலப்படுத்தும்.

சீனாவின் இந்த முடிவு, உள்நாட்டு தேவை குறைவு மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை ஆகியவற்றுக்கு மத்தியில் புதிய வருவாய் ஆதாரங்களைத் தேடும் பொருளாதார திட்டமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரி விலக்குகளை நீக்குவது நுகர்வோர்களுக்கான தங்கத்தின் விலையை உயர்த்தி, சில்லறை விற்பனை தேவையை, குறுகிய காலத்தில் குறைக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

முன்னதாக, VAT ஈடுசெய்வு முறை சில்லறை விற்பனையாளர்களுக்கு வரிச்சுமையை குறைத்து, உள்நாட்டு தங்க விலைகளை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க உதவியது. ஆனால் இப்போது சில்லறை விற்பனையாளர்கள் கூடுதல் செலவுகளை தாங்கிக்கொள்ளவோ அல்லது நுகர்வோரிடம் கடத்தவோ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஏற்கனவே குறைந்த லாபத்தில் இயங்கும் சில்லறை விற்பனையாளர்கள் இப்போது கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் - ஒன்று விலைகளை உயர்த்த வேண்டும் அல்லது குறைந்த லாபத்தை ஏற்க வேண்டும் என்று சீன விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். தங்கம் விற்பனை தொடர்பான வரி விலக்குகளை சீனா ரத்து செய்துள்ள நிலையில், இது இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது