
“அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக மாற்றப் போகிறேன்” என்ற வாக்குறுதியுடன் அதிகாரத்தில் அமர்ந்த டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு உத்தரவுகளை அறிவித்து வருகிறார். வரி விதிப்பில் இருந்து வணிகக் கொள்கைகள் வரை பல மாற்றங்களை அவர் கொண்டு வந்தாலும், அவற்றின் விளைவுகள் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில், மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மார்க் சாண்டி, “அமெரிக்க பொருளாதாரம் தற்போது மந்தநிலையின் விளிம்பில் உள்ளது” என எச்சரித்துள்ளார்.மார்க் சாண்டி கூறியதாவது:அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மாகாணங்கள் ஏற்கனவே மந்தநிலையைச் சந்தித்து வருகின்றன.
மேலும் 33% மாகாணங்கள் வளர்ச்சி இல்லாமல் நிலைத்த நிலைமையில் உள்ளன.மீதமுள்ள சில மாகாணங்களே வளர்ச்சி பாதையில் உள்ளன.இது, மந்தநிலை அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்பு அதிகம் என்பதை காட்டுவதாக அவர் கூறியுள்ளார்
முன்னதாக அளித்த பேட்டியிலும் சாண்டி, “அமெரிக்கர்கள் இப்போது இரண்டு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஒன்று – அன்றாட பொருட்களின் விலை அதிகரிப்பு. இரண்டாவது – வேலைவாய்ப்பு குறைவு” எனக் குறிப்பிட்டார்.
சூப்பர்மார்க்கெட்டுகளில் அன்றாடம் வாங்கப்படும் பொருட்கள் கூட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இது சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை பெரிதும் பாதித்துள்ளது.அதோடு, ட்ரம்ப் விதித்துள்ள அதிக வரிகள் பல துறைகளில் நிறுவனங்களின் லாபத்தை குறைத்துவிட்டதாகவும், இதனால் வேலைவாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகின்றன என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் தற்போது பணவீக்கம் 2.7% ஆக உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு இதே காலத்தில் அது 4% வரை உயரும் என்று சாண்டி கணித்துள்ளார். பணவீக்கம் அதிகரித்தால், மக்கள் செலவினம் மேலும் குறையும், பொருளாதாரம் சரிவைச் சந்திக்கும் அபாயம் அதிகரிக்கும்.
2008–09 உலக நிதி நெருக்கடியின் போது போலவே, இப்போது அமெரிக்கர்களின் தனிநபர் செலவினம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் வேலையிழப்பின் அச்சத்தில் பணத்தைச் சேமித்து வைக்கிறார்கள். சிலர் செலவழிக்கவே போதிய வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள்.இத்தகைய செலவின சரிவு, பொருளாதார மந்தநிலையின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
2008 நிதி நெருக்கடியை முன்கூட்டியே கணித்த நிபுணராகவே மார்க் சாண்டி உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார். ஆகையால், இப்போது அவர் கூறும் எச்சரிக்கை, அமெரிக்க அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் மிகப் பெரிய கவனச்செய்தியாக உள்ளது.
இதற்கிடையில் கடந்த காலத்தில், உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா ஒரு தனித்துவமான ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது ட்ரம்ப் அரசு விதித்துள்ள அதிக வரிகள் காரணமாக,பல நிறுவனங்கள் உற்பத்தி செலவில் சிக்கி வருகின்றன. தற்போது இந்தியா 7% க்கும் அதிகமான ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக ஜெர்மனியை முந்தி நிற்க இந்தியா தயாராகிவிட்டது.தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறை, உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
இந்த எழுச்சி அமெரிக்கவில் முதலீடு செய்யும் நாடுகளின் முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி வரும் நிலையினை உருவாக்கியுள்ளது. இதனால், அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகள் குறையும், உள்நாட்டு முதலீடு பாதிக்கப்படும் என அச்சம் நிலவுகிறதுஇதனால், சில நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நிலையங்களை இந்தியா, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளுக்கு மாற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுவே இந்தியாவுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் முதலீட்டையும் தரக்கூடும். ஆனால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு இது பெரும் இழப்பாக இருக்கும்.