24 special

இந்திய பெருங்கடல் இனி இந்திய கட்டுப்பாட்டில்.. புராஜெக்ட் 75I.. மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

PMMODI
PMMODI

இந்திய பெருங்கடல் இனி உலக நாடுகளுக்கான திறந்த விளையாட்டு மைதானமல்ல. யார் வேண்டுமானாலும் வந்து சுற்றிப் போகும் கடல் பகுதியும் அல்ல. நீருக்குள் நுழைந்தாலும் தெரியாது, மேலே வந்தாலும் தடயம் இருக்காது என்ற அளவுக்கு இந்தியாவின் கடற்படை வலிமை இன்று புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கான மிகப்பெரிய அடையாளமாக ஜெர்மனியுடன் இணைந்து தயாரிக்கப்படவுள்ள ‘புராஜெக்ட் 75I’ நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் உருவெடுத்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய மெகா ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த திட்டம், நாட்டின் கடற்படை சக்தியை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.


ஜெர்மனியுடன்  சுமார் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பதற்கான  ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது து. 2025–26 நிதியாண்டு முடிவதற்குள், அதாவது மார்ச் 31-க்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையை தலைமையிடமாக கொண்ட மஸகான் டாக் ஷிப்யார்டு நிறுவனம், ஜெர்மனியின் உலகப் புகழ்பெற்ற ‘தைஸ்க்ரூப்’ நிறுவனத்துடன் இணைந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க உள்ளது. இதில் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுவது ‘ஏர் இன்டிபென்டன்ட் ப்ரோபல்ஷன்’ எனப்படும் AIP தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட நாட்கள் நீருக்கு மேலே வராமல் கடலுக்குள் மறைந்து இருந்து செயல்பட முடியும். எதிரிகள் இருப்பதே தெரியாமல் தாக்கப்படுவது தான் இந்த கப்பல்களின் முக்கிய சிறப்பு. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா உள்ளிட்ட நாடுகளின் கடற்படை நடமாட்டம் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய மௌனத் தாக்குதல் திறன் கொண்ட கப்பல்கள் இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் இந்த திட்டம் முழுக்க முழுக்க ‘மேக் இன் இந்தியா’ கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடற்படையை போலவே இந்திய விமானப்படையின் வலிமையையும் அதிகரிக்கும் வகையில் 114 போர் விமானங்களுக்கு தேவையான MRFA திட்டத்திலும் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தரும் போது, கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் விமானங்கள் இணைவது இந்திய வான்வெளி பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.

இதனுடன், ரஃபேல் போர் விமானங்களின் தயாரிப்பு வரிசையை இந்தியாவிலேயே அமைக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை தற்சார்பு முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக பார்க்கப்படுகிறது ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள், தொழில்நுட்ப பரிமாற்றத்தில் இந்தியாவுக்கு அதிக நம்பகத்தன்மையுடன் செயல்படுகின்றன என்பது இந்த ஒப்பந்தங்கள் மூலம் தெளிவாகிறது..

இறுதியாக, பாதுகாப்புத் துறையில் இந்தியா எடுத்து வரும் இந்த தொடர் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்கின்றன. இந்தியா தனது எல்லைகள் மற்றும் கடல் பரப்புகளை பாதுகாப்பதில் எந்த வித சமரசத்துக்கும் இடமளிக்காது என்பதே அந்த செய்தி. ஐஎன்எஸ் விக்ராந்த், அரிகந்த் ரக அணுசக்தி நீர்மூழ்கிகள் மற்றும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள டீசல் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை ஒன்றிணையும் போது, இந்தியா ஒரு முழுமையான கடற்படை வல்லரசாக உருவெடுப்பது காலத்தின் கேள்வி மட்டுமே. எதிர்காலத்தில் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி மையமாக இந்தியா மாறும் பாதையில் இந்த மெகா ஒப்பந்தங்கள் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றன.