24 special

மதுரையில் தேர்தலும், திருவிழாவும்!!!

KALLAZHAGAR TEMPLE
KALLAZHAGAR TEMPLE

ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஒரு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அதிக அளவில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஒரு திருவிழாவை பார்ப்பதற்காக கோடான கோடி மக்கள் வருகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?? ஆம் உண்மைதான் அதுதான் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவாகும்!! இந்த பிரசித்தி பெற்ற திருவிழாவின் வரலாறு என்னவென்று பார்த்தால்!!சைவ மற்றும் வைணவ மக்கள் இணைந்து கொண்டாடும் திருவிழாவாகவும், மதுரையில் அமைந்துள்ள அழகர் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களுக்கும் பொதுவான திருவிழாவாகவும் இந்த சித்திரை திருவிழா அமைந்துள்ளது. தங்கை மீனாட்சி யின் திருமணத்தை பார்க்க வரும் கள்ளழகர் வருவதற்கு முன் திருமணம் நடந்து முடிந்த செய்தியை அறிந்து விட்டு வைகை ஆற்றில் எழுந்தருளி அப்படியே திரும்பி அழகர் மலையை நோக்கி வழியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார் என்றும் வரலாறு கூறுகிறது.


இந்த திருவிழாவானது கொடியேற்றத்தில் தொடங்கி கள்ளழகர் வைகையில் எழுந்தருளி அதன் பின் வண்டியூரில் அமைந்துள்ள  ஒரு மண்டபத்தில் வண்டுகர் முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து திரும்பி அழகர் மலைக்கு செல்வது வரை இந்த திருவிழாக்கள் மொத்தம் 15 நாட்கள் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இது உலகில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இந்த திருவிழாவை பார்க்க வேண்டும் என்று பல பகுதிகளில் உள்ள மக்கள் முதல் கொண்டு மதுரையிலிருந்து வேலைக்காக சென்ற அனைவரும் திரும்பி இந்த திருவிழாவை பார்ப்பதற்காக வருகின்றனர். மேலும் பக்தர்கள் மீனாட்சி, கருப்பசாமி போன்ற வேடங்கள் அணிந்து அவர்களின் குழந்தைகளுக்கும் அழகாக அந்த வேதங்களை அணிவித்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அதே சமயத்தில் இந்த சித்திரை மாதம் என்பது மதுரையில் வெயில் உச்சத்தில் இருக்கும் சமயம்,, ஆனால் அடிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் மதுரையில் உள்ள தெருக்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்க முடியும். மேலும் இந்த திருவிழாவில் வெளியூரில் இருந்து வரும் மக்கள் பசியில் இருக்கக் கூடாது என்று தெருக்களில் எல்லா இடங்களிலும் உணவுகள் மற்றும் மோர் போன்ற பானங்கள் வழங்கப்பட்டு கொண்டே தான் இருக்கும். 

இந்த திருவிழாவானது வெறும் வழிபாடு மட்டுமல்லாமல், ஆடுவது பாடுவது போன்ற பல்வேறு நிகழ்வுகளும் அங்கங்கு நடந்து கொண்டே தான் இருக்கும் என்பதால் பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே இந்த மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவானது கலாச்சாரம், உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. தற்போது மதுரையில் பல்வேறு இடங்களில் தேர்தல் வேலைகள் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கான வேலைப்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.மேலும் வரும் 19ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்றும், இருபதாம் தேதி மீனாட்சி அம்மனின் திக்கு விஜயம் அதன் பின் இருபத்தி ஒன்றாம் தேதி மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாகவும், மேலும் 22 ஆம் தேதி தேரோட்டம் அதனைத் தொடர்ந்து, கள்ளழகர் எதிர் சேவையை அடுத்து, வரும் 23ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அன்றுதான் மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. இப்போதும் இது போலவே தேர்தல் நேரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது!! தேர்தல் கொண்டாட்டமும் திருவிழா கொண்டாட்டமும் இணைந்து மதுரையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிய போகிறது. இதுவரை இந்த திருவிழாவை பார்க்காதவர்கள் இந்த முறையாவது சென்று பார்த்துவிட்டு வாருங்கள்!!