
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழா இன்று நடந்தது. டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், கோப்புகளில் கையெழுத்திட்டு வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் 8 அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சங்கர் ஜிவாலை தொடர்ந்து புதிய டிஜிபி யார் என்பதில் கேள்வி எழுந்தது. டிஜிபி பதவிக்கு நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பதவியில் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி டிஜிபி ஓய்வு பெற மூன்று மாதங்களுக்கு முன்னரே, 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பும். அதில் இருந்து மூவரை யுபிஎஸ்சி அமைப்பு மாநில அரசுக்குப் பரிந்துரைக்கும்.. அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்கலாம்.
இதற்கிடையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் ஜி.வெங்கட்ராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைத்தார். இருப்பினும், சட்ட ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவியேற்ற இந்த நிகழ்ச்சியில் பல மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஏன் வெங்கட்ராமன் பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இது குறித்து பாஜக முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு.மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது.
திரு. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக. காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன். என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
மேலும் இது மட்டுமல்ல டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் மீறியிருக்கிறார்.
2006 பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் டிஜிபி நியமனம் தொடர்பாக வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.டிஜிபி பதவிக்கு முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில், சீனியர் அதிகாரியை நியமிக்க வேண்டும், இந்த நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ஆக்டிங் டிஜிபி எனப்படும் தற்காலிக டிஜிபி அல்லது பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்படக்கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.