
தமிழக தேர்தல் அரசியலில் அகில இந்திய பா.ஜ.க இனி பார்வையாளராக இல்லை. நேரடியாக களத்தில் இறங்கி, மிக முக்கியமான பிரச்சினைகளை தன் கைகளில் எடுத்துவிட்டது என்பதை அமித்ஷாவின் சமீபத்திய தமிழக பயணம் தெளிவாக உணர்த்தியுள்ளது. இது திராவிட கூடாரத்தை கலங்க வைத்து வைத்துவிட்டது. வெறும் 4 நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டமா அதுவும் திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே வந்த கூட்டம் என உளவுத்துறை கூறியுள்ளது. கெடுபிடிகள் அதிகம் இருந்தும் கூட்டத்தை கூட்டி மாஸ் செய்துள்ளது பாஜக.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண நிறைவு நிகழ்வில் அமித்ஷா ஆற்றிய உரை,வரவிருக்கும் தேர்தல் யுத்தத்தின் திசையை மிக வெளிப்படையாக அறிவித்தது.அது ஒரு சாதாரண அரசியல் பேச்சல்ல. திமுகவை நேரடியாக குறிவைத்து, “இமாலய ஊழல்” முதல் “இந்துத் துவேஷம்” வரை திமுக ஆட்சியின் அடிப்படை குறைபாடுகளை அவர் பட்டியலிட்ட விதம், பாஜக இனி எந்த வழியில் தேர்தல் வியூகத்தை வகுக்கப் போகிறது என்பதற்கான தெளிவான சைகை.
இதை ஒரு மாநில பாஜக தலைவர் அல்லது தொண்டர் பேசியிருந்தால், எதிரணிகள் வழக்கம்போல் எளிதில் கடந்து போயிருப்பார்கள். ஆனால் இங்கு பேசுவது இந்தியாவின் உள்துறை அமைச்சர். மத்திய அரசின் உயர்மட்ட அதிகார அமைப்புகளின் மூலம், தமிழக அரசின் ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு பலவீனமும், ஒவ்வொரு மறைக்கப்பட்ட உண்மையும் அவருக்கு தெரியும். அதனால் தான் அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளை திமுக எளிதில் உடைக்க முடியாத நிலை.
அமித்ஷா மிகக் கடுமையான அரசியல் முடிவுடன் தமிழகத்தில் கால் வைத்துவிட்டார். தேர்தல் நெருங்க நெருங்க, பாஜக தனது அஸ்திரங்களை இன்னும் பலமாகப் பயன்படுத்தும். காரணம், நிர்வாகம், விசாரணை, சட்டம், தேசிய அரசியல் எல்லா மட்டங்களிலும் அவர்கள் சக்தி மிக்கவர்கள்.
இதை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்வி. ஒருபக்கம் “தமிழ்”, “சாதி ஒழிப்பு”, “மதநல்லிணக்கம்” போன்ற பழைய, துருப்பிடித்த ஆயுதங்களை மீண்டும் தூக்கினாலும், உள்ளே அரித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களின் ஊழல், தீவிரவாதம் தொடர்பான சந்தேகங்கள், காவல்துறையின் வெளிப்படையான பலவீனம் ஆகியவை சாதாரண விஷயங்கள் அல்ல. நீதிமன்றத்தில்கூட இந்துக்களை புறக்கணிப்போம் என்ற நிலைப்பாட்டில் திமுக நின்ற சம்பவங்கள், எதிர்காலத்தில் அவர்களையே திரும்பி தாக்கும்.
திமுக இன்று மிக மோசமாக சிக்கியிருப்பது இரண்டு விஷயங்களில் அமைச்சர்களின் ஊழல் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை. இதை உணர்ந்ததால்தான் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல அவசர நகர்வுகளை செய்தார்கள். சர்ச்சைக்குரிய காவல்துறை அதிகாரிகளை அதிகாரமற்ற பதவிகளுக்கு மாற்றியதே திமுகவின் உள்ளார்ந்த நடுக்கத்தை வெளிப்படையாக காட்டியது.
பாஜக தன் பலத்தை இப்போது மெதுவாக வெளிப்படுத்துகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, இந்த பலம் இன்னும் தீவிரமாக வெளிப்படும். அதன் பலமிக்க கரங்கள் பல திசைகளில் செயல்படும். அமித்ஷா நிச்சயம் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்; அவருடன் அகில இந்திய தலைமை வரலாம். தமிழக அரசியல் இனி அடிக்கடி பரபரப்புக் காட்சிகளை காணும்.
இப்போது 2026.அதிமுகவின் பலவீனம், திமுகவின் திணறல், விஜயண்ணாவின் அட்டகாசம் — இந்த மூன்றுக்கிடையில், பாஜக தமிழகத்தில் தேசிய அரசியலை வேரூன்ற வைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. காங்கிரஸின் பழைய அணுகுமுறையைப் போல அல்லாமல், பாஜகவின் செயல்பாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது வாய்ப்பு உள்ளது.
