Tamilnadu

திமுகவின் பிறவி குணமே இதுதான் ..முழுமையாக கூறி வெளுத்து எடுத்த டாக்டர் கிருஷ்ணசாமி !!

dr krishnasamy
dr krishnasamy

புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி , திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்றாகவும் ஆளும் கட்சியாக இருக்கும்போது  ஒருமாதிரியாகவும் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக ஒன்றை 100/100 எதிர்ப்பதும், ஆளுங்கட்சியான பிறகு அதற்கு வேறு ஏதாவது விளக்கங்களைச் சொல்லி ஆதரிப்பதும் தான் திமுகவின் பிறவிக்குணம் என வெளுத்து எடுத்துள்ளார் இதுகுறித்து அவர் தெரிவித்த முழுமையான கருத்து பின்வருமாறு :


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேய பொறியாளர் 'பென்னி குவிக்' அவர்களின் குடும்பச் சொத்தை விற்று, 1887-ல் துவங்கி 1895-ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டதே 'முல்லைப்பெரியாறு அணை' ஆகும். ஏறக்குறைய 130 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் அணையின் கட்டுமானம் உறுதியாக இருப்பதாகவே தொழில்நுட்பக்குழு பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடி வரையிலும் தேக்கிக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டே கட்டப்பட்டிருக்கிறது. 

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் எல்லைக்குள் போனது.152 அடி உயரம் வரையிலும் தேக்கினால் தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதனால் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும். ஆனால், கேரள அரசின் தொடர் பிடிவாதத்தால் நீண்ட காலம் தமிழ்நாடு அரசு தனது முழு பங்கையும் பெற முடியவில்லை. 

எனவே, தமிழகத்தில் 2012-2013 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிற்கு போராட்டங்கள் நடைபெற்றது. அன்றைய காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நீதிமன்றத்தின் மூலமும் போராடியதோடு, மத்திய அரசிற்கும் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நாமும் கலந்துகொண்டோம். 2006-2011 வரை ஆட்சியிலிருந்த திமுக, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்காக மதுரை,தேனி மாவட்டங்களில் பெரிய போராட்டங்களை அறிவித்து விட்டு பின்வாங்கிக் கொண்டார்கள். 

ஆனால், 2012-13 களில் பல சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் நடைபெற்ற போராட்டங்கள் நல்ல விளைவுகளை தந்தது.திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாமல் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, 2012-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை மட்டுமே குறைகூறி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது, திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான நல்ல மழைப்பொழிவும் உள்ளது.

152 அடி வரையிலும் தேக்கினால் வறட்சியில் சிக்கித்தவிக்கும் 5-6 மாவட்டங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும். உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய 142 அடியாவது தேக்கினால் தான் குறைந்தபட்சம் தமிழக மக்களின் தேவையை நிறைவேற்ற முடியும். 142 அடி என்று கணக்கு இருந்தாலும் கூட, 100 அடிக்கு மேல் உயரும்  நீரைத்தான் பாசனத்திற்கு திறந்துவிட முடியும். 

அதுமட்டுமின்றி, 135 அடிக்கு மேல் உயரும் ஒவ்வொரு அடியும் தான் அணையின் கொள்ளளவில் அதிகப்படியானதாக இருக்கும்.அப்படி இருக்கும் போது, 142 கூட இல்லாமல் வெறும் 136 அடி மட்டுமே நீர் நிற்கிறது என்றால், அணையில் பாசனத்திற்கான நீரின் கொள்ளளவு பாதியாகவே இருக்கும். இதனால், தமிழகமும் 10 டிஎம்சி நீர் பெற வேண்டிய இடத்தில் 5 முதல் 6 டிஎம்சி நீரை மட்டுமே பெற முடியும்.

இந்த நிலையில் தமிழக அரசின் உரிமையை கவனத்தில் கொள்ளாமல் கேரள அரசின் அமைச்சர்களே நீரை திறந்து விட்டிருக்கிறார்களே,இதுபோன்று வேறு யாருடைய ஆட்சியிலாவது நடந்திருந்தால் இந்நேரம் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்.? என்னவெல்லாம் குறை கூறியிருப்பார்கள்.? அடிமை அரசு, சுயமரியாதை இல்லாத அரசு, தமிழகத்தை விற்று விட்ட அரசு என்றெல்லாம் இகழ்ந்திருப்பார்கள் அல்லவா.?

ஆனால், இப்போது ஏறக்குறைய 5 டிஎம்சி நீரை நிறுத்த முடியாமல், அதற்கு கைமாறாக பேபி அணைப்பகுதியில் இருந்து 15 மரங்களை மட்டும் வெட்டுவதற்கு மிகுந்த தாராள மனதோடு பினராய் விஜயன் அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளைத்தான் 'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்று பழமொழி சொல்வார்கள்.

ஒன்றல்ல, இரண்டல்ல இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகளை சொல்லலாம். கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு 'பன்வாரிலால் புரோகித்' ஆளுனராக பதிவியேற்ற பின் சில மாவட்டங்கள் சென்று அதிகாரிகளை நேரில் சந்தித்து சில ஆய்வுகளை மேற்கொண்டார். அதற்கு, தமிழகம் தனது உரிமையை விட்டுவிட்டது, ஆளுநருக்கு மாநிலத்தில் ஆய்வு செய்ய உரிமை இல்லை என்றெல்லாம் கூறி, ஆளுநர் செல்லும் இடமெல்லாம் திமுகவினர் கருப்புக்கொடி காட்டினர்.

ஆனால், தற்போது அவர்களே ஆட்சியில் அமர்ந்திருக்கும் போது தற்போதைய ஆளுநர் கேட்கும் கோப்புகளையும், தரவுகளையும் அதிகாரிகளே ஓடோடிச்சென்று ராஜ்பவனில் சமர்ப்பிக்கிறார்கள். துணை வேந்தர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி அறிவுரை வழங்க முடிகிறது.எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றை 100/100 எதிர்ப்பதும், ஆளுங்கட்சியான பிறகு அதற்கு வேறு ஏதாவது விளக்கங்களைச் சொல்லி ஆதரிப்பதும் தான் திமுகவின் பிறவிக்குணம். இதைத்தான் 'வாய்பேசத் தெரிந்த பிள்ளை பிழைத்துக் கொள்ளும்' என்பார்கள்.

இப்பொழுது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, 139.5 அடி இருக்கிறதா.? அல்லது‌ 138 அடியா?, 135 அடியா? என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, உச்சநீதிமன்றம் கூறிய படி 142 அடிக்கு கீழ் நீர்மட்டத்தை குறைக்க முடியாது என்று ஏன் தெரிவிக்கவில்லை.? அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கேரள அமைச்சர்கள் மட்டும் வந்து அணையை திறக்க அனுமதி அளித்தது ஏன்.? என்ன ரகசிய உடன்பாடு.?

முல்லைப்பெரியாறு அணையின் கட்டுப்பாட்டை தமிழகம் போராடிப் பெற்ற உரிமையை மீண்டும் கேரள அரசிற்கே வழங்க வேண்டிய அவசியம் என்ன.?எனும் பல கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. இந்நிலையில், வருகின்ற 10-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்ற பொழுது தமிழக அரசு என்ன சொல்லப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழக மக்களின் கடும் போராட்டத்தால் பெறப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை உச்சநீதிமன்றத்தில் நிலைநாட்டி, அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தும் உரிமையை நிலைநாட்டவில்லை என்றால், புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும் மிகப்பெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.என குறிப்பிட்டுள்ளார் .

'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' - என்ற பழமொழி திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு நன்கு பொருந்தித்தானே வருகிறது. தமிழகத்தின் நான்கு மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் மாநில அரசு மெத்தனம் காட்டக்கூடாது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடி, நாளை 152 அடியாக நிலைநாட்டப்பட வேண்டும்.