
17வது BRICS மாநாடு பிரேசிலில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த மாநாட்டை அமெரிக்கா உற்று நோக்க தொடங்கியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ: சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டனம் தெரிவிக்கப்படாததால், இந்தியா இதன் கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டது. இதனையடுத்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த தாக்குதலுக்குகண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.இந்தியா, ரஷியா, சீனா, ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய அமைப்புதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றிருந்தார்.
ஆனால், இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், பஹல்காம் தாக்குதல் குறித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து இதன் கூட்டறிக்கையில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்திருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. பிரிக்ஸ் பிரகடனத்தில், "ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
"பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய செயல்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பது உட்பட, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று பிரிக்ஸ் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடினார். இது தொடர்பாகப் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "மனிதக்குலம் எதிர்கொள்ளும் மிக மோசமான சவால்களில் பயங்கரவாதமும் ஒன்று. சமீபத்தில், பஹல்காமில் இந்தியா மனிதாபிமானமற்ற மற்றும் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது. இது மனிதக்குலம் மீதான தாக்குதல்.இங்கு இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை. எந்தவொரு நாடாவது பயங்கரவாதத்திற்கு நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவை வழங்கினால், அதற்குரிய விலையை அது கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதை ஆதரிப்போரையும் நிச்சயம் ஒரே மாதிரி எடைபோட முடியாது.தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காகப் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை ஏற்கவே முடியாது. அனைத்து நாடுகளும் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். மேலும் மகாத்மா காந்தி மற்றும் கௌதம புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியா அமைதியின் வழியைத் தொடரும். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், மனிதக்குலத்தின் நலனுக்கு அமைதியே சிறந்த வழி" என்றார்.இரட்டை நிலைபாடு என சீனாவை நேருக்கு நேர் பேசியது ஒரு நிமிடம் அந்த அரங்கையே அதிரவைத்துள்ளது. இதை உலக நாடுகள் உற்றுநோக்கியுள்ளது.