24 special

அமெரிக்க செயற்கைக்கோள்; இந்திய ராக்கெட் – உலகம் திரும்பிப் பார்த்த நாள்!! பாரதத்தின் பின்னால் வரிசை கட்டும் வல்லரசுகள்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இஸ்ரோவில் இருந்து விண்ணை நோக்கி பாய்ந்த அந்த ராக்கெட், ஒரு செயற்கைக்கோளை மட்டும் சுமக்கவில்லை. அது இந்தியாவின் தன்னம்பிக்கையையும், உலக அரசியலில் அதன் உயர்ந்து வரும் நிலையும் சுமந்து சென்றது. அமெரிக்காவுக்குச் சொந்தமான, சுமார் 6500 கிலோ எடையுள்ள மிக கனமான செயற்கைக்கோளை, இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவி, நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது.


பொதுவாக, இவ்வளவு எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவுவது என்பது மிகுந்த செலவும், உயர்தர தொழில்நுட்பமும், சிறிய தவறுக்கும் இடமில்லாத துல்லியமும் தேவைப்படும் கடினமான பணியாகும். ஆனால், அந்தச் சவாலை இந்தியா சுலபமாகக் கடந்து காட்டியுள்ளது. அமெரிக்காவில் இதே செயற்கைக்கோளை ஏவுவதற்காக ஆகும் செலவை விட, இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் இந்த ஏவுதல் சாத்தியமானது என்பதே, உலக கவனத்தை இந்தியா பக்கம் திருப்பிய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக, அமெரிக்கா தன்னுடைய வான்வெளி செலவுகளை கட்டுப்படுத்தி வரும் நிலையில், தரத்திலும் பாதுகாப்பிலும் எந்த சமரசமும் செய்ய முடியாத கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. அந்த சூழலில்தான், குறைந்த விலையில் அதிக நம்பகத்தன்மை கொண்ட இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம், அமெரிக்காவின் தேர்வாக மாறியுள்ளது. இது ஒரு வர்த்தக முடிவு மட்டுமல்ல; இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட தருணமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள், சாதாரண தகவல் பரிமாற்றத்துக்கானது அல்ல. இது அடுத்த கட்ட டிஜிட்டல் புரட்சிக்கான முன்னோடியாக கருதப்படுகிறது. இனி, மொபைல் டவர்கள், தரைமட்ட கட்டமைப்புகள் இல்லாமலேயே, செயற்கைக்கோள்கள் நேரடியாக இணையம் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் எதிர்காலத்தின் தொடக்கமாக இது அமையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த எதிர்காலத்தின் கதவை திறக்கும் முயற்சியில், இந்தியாவின் பங்கு முக்கியமானதாக மாறியுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்த ஏவுதல், உலகின் பிற நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா இனி உதவி தேடும் நாடல்ல; அது சேவை வழங்கும், வழிகாட்டும் உலக சக்தி. இதன் விளைவாக, இனி பல நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை இந்தியா மூலமாக ஏவ முன்வரும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், குலசேகரபட்டணம் ராக்கெட் ஏவுதளம் விரைவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வர உள்ளது. அந்த தளம் செயல்படத் தொடங்கியவுடன், கடல் வழியாக, குறைந்த செலவில், வேகமாக ராக்கெட்டுகளை ஏவக்கூடிய புதிய திறன் இந்தியாவுக்கு கிடைக்கும். இது இந்தியாவின் விண்வெளி திறனை மட்டுமல்ல; அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் வலிமையையும் அதிகரிக்கும் ஒரு முக்கிய கட்டமாக அமையும்.

1960-களில், தன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கே அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் நாடி உதவி கேட்ட தேசம் இந்தியா. ஆனால் இன்று, அதே அமெரிக்கா, தன் முக்கியமான தொழில்நுட்ப திட்டத்துக்காக இந்தியாவின் ராக்கெட் மீது நம்பிக்கை வைத்து நிற்கிறது. இந்த மாற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; பல தசாப்தங்களாக இந்திய விஞ்ஞானிகள் செய்த உழைப்பும், அவர்களுக்கு  பாஜக அரசால் வழங்கப்பட்ட அரசியல் ஆதரவும் இதன் அடித்தளம்.

இந்த ஏவுதல், ஒரு அறிவியல் சாதனை மட்டும் அல்ல. அது ஒரு தேசத்தின் வளர்ச்சியின் சின்னம். உலகம் இந்தியாவை இப்போது வேறு கண்களில் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. விண்வெளியில் இந்தியா உருவாக்கி வரும் இந்த நம்பிக்கை முத்திரை, எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. பல வல்லரசு நாடுகளும் இந்தியா பின்னால் நிற்கிறது.