24 special

தி.மு.க-வின் 'ஆபரேஷன் காங்கிரஸ்' தோல்வி; மொத்தம் 12 எம்.எல்.ஏக்கள் களம் இறங்கும் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி

MKSTALIN,VIJAY
MKSTALIN,VIJAY

தமிழக அரசியலின் தற்போதைய கள நிலவரம் மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி என்பது பல ஆண்டுகளாக ஒரு வலுவான அடித்தளத்தில் இருப்பது போல் தோன்றினாலும், வரும் தேர்தல் சூழலில் அதற்குள் உருவெடுத்துள்ள நிழல் யுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தி.மு.க. மேலிடம் டெல்லி வரை சென்று காங்கிரஸைச் சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் ஒருபுறம் வெற்றியைத் தருவது போல் தெரிந்தாலும், தமிழக காங்கிரஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட தரப்பினர் 'விசில்' அடித்துச் செய்யும் அலப்பறைகள் அறிவாலயத்தை உச்சகட்ட கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஏற்கனவே அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஒரு தெளிவான வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தி.மு.க. அணியில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் நீடிக்குமா என்பதே மிகப்பெரிய அரசியல் சஸ்பென்ஸாக மாறியிருக்கிறது.


ஆரம்பத்தில் 63 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியபோது, டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் டெல்லி சென்று நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதன் பின்னரே, முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தூதுவராக கனிமொழி டெல்லிக்குச் சென்று, மிகக் கடினமான சூழலில் காங்கிரஸைச் சமாதானப்படுத்தி ஒரு உடன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கு கூட்டணி  ஆட்சிக்கு ஓகே சொல்லிவிட்டு  இங்கு வந்ததும் பல்டி அடித்தது  திமுக.  இது  கூட்டணிக்குள் பெரும்  அதிர்ச்சியை கொடுத்துள்ளது. , நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) அரசியலில் நுழைந்துள்ள நிலையில், காங்கிரஸில் உள்ள சில 'ஸ்லீப்பர் செல்கள்' த.வெ.க.வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. டெல்லி காங்கிரஸ் தலைமையோடு நெருக்கமாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள்,  எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

புதுச்சேரியிலும் இதே போன்ற ஒரு தலைமைப் போட்டி முற்றியுள்ளது. 2014 தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் எழுப்பியுள்ள விமர்சனங்கள், தி.மு.க.வின் தன்மானத்தைச் சீண்டுவதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். இந்தச் சூழலைத் தி.மு.க. மேலிடம் மிக நுணுக்கமாகக் கவனித்து வருகிறது. காங்கிரஸ் ஒருவேளை விஜய்யின் கட்சியுடன் கைகோர்க்க முயன்றால், அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை என்கிற முடிவில் தி.மு.க. இருக்கிறது. இதற்காக ஒரு 'மாஸ்டர் பிளான்' ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏக்களைத் திரட்டி, கட்சியை இரண்டாக உடைக்கவும் தி.மு.க. தயங்காது என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. செல்வப்பெருந்தகை, சந்திரசேகர் உள்ளிட்ட சுமார் 12 எம்.எல்.ஏக்களிடம் இதற்காக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் தி.மு.க.வின் நிலைப்பாட்டிற்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு உருவான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை போன்ற ஒரு பிளவை இப்போது மீண்டும் உருவாக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஒருவேளை கூட்டணியை விட்டு வெளியேறினால், "ஒரு நடிகருக்காக ஸ்டாலினுக்குத் துரோகம் இழைத்துவிட்டது காங்கிரஸ்" என்கிற பிரச்சாரத்தை முன்வைத்து, அந்த 12 எம்.எல்.ஏக்களையும் அதே தொகுதிகளில் மீண்டும் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, பின்னர் அவர்களைத் தங்கள் கட்சியிலேயே இணைத்துக் கொள்ளவும் தி.மு.க. கணக்கு போடுகிறது. இதற்காக அறிவாலயத்தில் பலமுறை ஆலோசனைகள் நடந்து முடிந்துவிட்டன.  இனி காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவில்தான்,  அடுத்தகட்ட நகர்வும் அடங்கியிருக்கிறது.