24 special

போடு அதிரடி ஆட்டத்தில் மேற்கு வங்கம்! பஞ்ச் டயலாக் இல்லை.. ஒன்லி செயல் தான்! பதவியேற்ற உடனேயே பல அதிரடிகள்!

MAMATABANERJEE,AMITSHA
MAMATABANERJEE,AMITSHA

மேற்கு வங்க அரசியலில் பல ஆண்டுகளாக “அசைக்க முடியாத ஆட்சி” என்று கருதப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை இன்று சரிந்து விழுந்திருக்கிறது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி அரசை மக்கள் தூக்கி எறிந்து, முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சிக்கு முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். இது சாதாரண தேர்தல் வெற்றி அல்ல; மேற்கு வங்க அரசியலின் முழு திசையையும் மாற்றிய புரட்சி என்றே சொல்லப்படுகிறது.


208 இடங்களை கைப்பற்றி பாஜக உருவாக்கிய வெற்றி, தேசிய அரசியலிலேயே பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. “மேற்கு வங்கத்தில் பாஜக வளராது” என்று பல ஆண்டுகள் கூறிய அரசியல் விமர்சகர்களின் கணிப்புகள் அனைத்தும் சிதறி விழுந்தன.. “பஞ்ச் டயலாக் இல்லை… ஒன்லி செயல் தான்” என்ற ரீதியில் புதிய பாஜக அரசு ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட தொடங்கியுள்ளது.

பதவியேற்ற உடனேயே முதல்வர் சுவேந்து அதிகாரி எடுத்த முடிவுகள் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின. அரசின் கீழ் இயங்கும் பல வாரியங்களின் தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிகள் ஒரே அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. பல ஆண்டுகளாக அதிகாரத்தை பிடித்துக் கொண்டு இருந்த அமைப்புகளுக்கு நேரடி அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.அதோடு மட்டும் இல்லாமல், 60 வயதுக்கு மேல் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு பணியில் இருந்தவர்களின் பணி நீட்டிப்பும் ரத்து செய்யப்பட்டது. “அரசு அலுவலகம் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் தனி முகாம் அல்ல” என்ற செய்தியை நேரடியாக வெளிப்படுத்தும் வகையில் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் திரிணாமுல் ஆட்சியின் மீது நீண்ட காலமாக எழுந்து வந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இப்போது விசாரணை வலையில் சிக்க ஆரம்பித்துள்ளன. நகராட்சி நிர்வாக துறையில் பணியிட ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை கைது செய்தது மிகப்பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது.

பாஜகவின் கவனம்  எல்லை பாதுகாப்பின் மீதே இருக்கிறது. வங்கதேசத்துடன் இந்தியா 4,096 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் வேலி அமைக்கப்பட்டிருந்தாலும், இன்னும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பகுதியில் வேலி அமைக்கப்படாமல் இருந்தது.

தேர்தல் வெற்றிக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிவிப்பு மேலும் கவனத்தை ஈர்த்தது. மேற்கு வங்கத்தில் எல்லை வேலி அமைப்பதற்காக 45 நாட்களுக்குள் 600 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.இப்போது அந்த அறிவிப்பை செயலாக்கமாக மாற்றும் பணியை முதல்வர் சுவேந்து அதிகாரி ஆரம்பித்துள்ளார். 650 ஏக்கர் நிலத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

பேச்சை விட செயலில் கவனம் செலுத்தும் அரசாக தங்களை காட்ட முயற்சிக்கும் புதிய பாஜக அரசு, ஆரம்ப நாட்களிலேயே நாடு முழுவதும் கவனத்தை திருப்பியுள்ளது.இப்போது அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று — இந்த அதிரடி ஆட்சி அடுத்ததாக என்ன செய்யப் போகிறது?