24 special

போர் மேகங்கள் சூழ்ந்த நேரம் நேரடியாக களமிறங்கும் மோடி மொத்தமாக திரும்பிய பார்வை உலகத்திற்கு இந்தியாவின் ஸ்ட்ராங் மெசேஜ்

PMMODI,MOHAMMEDBINZAYED
PMMODI,MOHAMMEDBINZAYED

உலக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பதற்றம் நிரம்பிய நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும்  வெளிநாட்டு பயணம் ; உலக அரங்கில் இந்தியாவின் வலிமை, தைரியம் மற்றும் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தும் மிக முக்கியமான தூதரக நகர்வாக பார்க்கப்படுகிறது. வரும் 15ஆம் தேதி தொடங்கும் இந்த ஐந்து நாள் பயணத்தில் மூன்று கட்டங்களாக பல முக்கிய நாடுகளை சந்திக்க இருக்கும் மோடி, உலக அரசியலின் மிகவும் நுணுக்கமான தருணத்தில் இந்தியாவின் குரலை உலகத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறார்.


முதலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் அவரது பயணம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை பகுதி பதற்றத்தின் உச்சியில் இருக்கும் நேரம் இது. மத்திய கிழக்கில் எந்த நேரத்திலும் பெரும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எண்ணெய் வர்த்தகம் முதல் உலக பொருளாதாரம் வரை அனைத்தையும் பாதிக்கக்கூடிய அந்த சூழ்நிலையில் இந்திய பிரதமர் நேரடியாக அமீரகத்திற்கு செல்வது தைரியமான அரசியல் முடிவாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நெருங்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாளியாக அமீரகம் மாறியுள்ள நிலையில், இந்த சந்திப்பு பல முக்கிய ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு உலகில் இஸ்ரேலுடன் திறந்த நட்பை பேணும் மிக முக்கிய நாடாக அமீரகம் திகழ்கிறது. அதே நேரத்தில் இந்தியாவுடனான அதன் உறவும் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. எண்ணெய் வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப முதலீடு, கடல்சார் பாதுகாப்பு, துறைமுக வளர்ச்சி, விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு வரை பல துறைகளில் இந்தியா மற்றும் அமீரகம் இணைந்து செயல்படுகின்றன. இந்த சூழலில் மோடியின் வருகை அரபு உலகிற்கு ஒரு தெளிவான அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது. இந்தியா இனி வெறும் பார்வையாளர் நாடல்ல; உலக அரசியலில் நேரடியாக செல்வாக்கு செலுத்தும் சக்தியாக மாறிவிட்டது என்பதையே இந்த பயணம் காட்டுகிறது.

அமீரகத்தை தொடர்ந்து நெதர்லாந்து செல்லும் மோடி, அங்கு உயர் தொழில்நுட்பம், கடல்சார் வர்த்தகம், நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். அதன் பின் ஸ்வீடன் செல்லும் மோடி, வட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய கூட்டமைப்பான நார்டிக் அமைப்புடன் இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த உள்ளார் 19ஆம் தேதி இத்தாலி செல்லும் மோடி, அங்கு பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்த முழு பயணத்தையும் ஒரு சாதாரண வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பார்க்க முடியாது. உலகின் பல பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வரும் தருணத்தில், இந்தியா ஒவ்வொரு பிராந்தியத்துடனும் தன்னுடைய உறவுகளை வலுப்படுத்திக் கொண்டே செல்கிறது. ஒருகாலத்தில் உலக மேடையில் பேச அழைக்கப்பட்ட நாடாக இருந்த இந்தியா, இன்று உலக பிரச்சினைகளில் தீர்வு கூறும் நாடாக மாறியுள்ளது. அந்த மாற்றத்தின் அரசியல் அடையாளமாகவே இந்த பயணம் பார்க்கப்படுகிறது. தேச நலனுக்காக உலக நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.