
கொடைக்காணலில் இதமான சூழலில் ஓய்வில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது., சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், அறிவாலயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ரகசியக் காய்நகர்த்தல்கள் அவரை நிலைதடுமாறச் செய்துள்ளன. ஒருபுறம் அமைதி நிலவினாலும், மறுபுறம் திமுகவின் அஸ்திவாரத்தையே அசைக்கும் விதமாக 20-க்கும் மேற்பட்ட முக்கியப் புள்ளிகள் வேறு கட்சியுடன் பேசி வருவதாக வந்த உளவுத்துறை ரிப்போர்ட் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அம்பலமாகியுள்ளது. இந்தத் தகவலைக் கேட்ட அடுத்த கணமே, தனது ஓய்வுத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு சென்னைக்குக் கிளம்பியுள்ளார். நிலைமை கைமீறிப் போவதற்குள் அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானம் செய்யுமாறு மூத்த அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பின்னடைவாக அமைந்தால், இப்போது கசிந்துள்ள இந்தக் கட்சித் தாவல் பட்டியல் இன்னும் நீளக்கூடும் என்ற அச்சம் திமுகவின் உள்வட்டாரத்தில் பலமாக நிலவுகிறது.
குறிப்பாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் கயல்விழி செல்வராஜ் போன்றவர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ், ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது திமுக தலைமை தலையிட்டு அவரைச் சமாதானம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதேபோல், சென்னை டி. நகர் தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த கருணாநிதி, தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது மகள் மோனிஷாவைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளார். திருவொற்றியூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ கே.பி. சங்கர்,என்னை உருவாக்கிய திமுகவுக்காக இந்தத் தேர்தலில் மட்டும் வேலை செய்வேன், அதன் பிறகு இந்தக் கட்சியில் இருக்க மாட்டேன் என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகக் கூறியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் பேரனான வெற்றி அழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்காமலும், தேர்தல் பணிகளில் ஈடுபடாமலும் ஒதுங்கியே இருந்துள்ளார். அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, நாமக்கல் ராமலிங்கம் மற்றும் லால்குடியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சௌந்தரபாண்டியன் போன்றவர்களுக்கும் சீட் கிடைக்காததால் அவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். அதேபோல், தென்காசி சிவபத்மநாதன் போன்ற மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கட்சித் தலைமை தங்களை அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். கட்சியின் அடிமட்டத்தில் உழைத்த பழைய நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, பொருளாதார ரீதியாக வலுவான புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
