
தமிழக அரசியல் களம் தற்போது மீண்டும் ஒரு பெரும் அதிர்வைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 'டிரான்ஸ்பார்மர்' கொள்முதல் முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி, தி.மு.க. தரப்பை நிலைதடுமாறச் செய்திருக்கிறது. தமிழக மின் வாரியத்திற்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் சுமார் 397 கோடி ரூபாய் ஊழலில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக,எழுந்த புகாரை சி.பி.ஐ. கையில் எடுத்திருப்பது, வெறும் ஒரு வழக்கு சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கப்படவில்லை; இது ஒரு மிகப்பெரிய அரசியல் 'ஸ்கெட்ச்' என்பதையே காட்டுகிறது. ஏற்கெனவே அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, இந்த சி.பி.ஐ. விசாரணை ஒரு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், இதுவரை மாநிலப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வரம்பில் இருந்த விவகாரம், இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. வசம் சென்றுள்ளது.
இந்த அதிரடி திருப்பம் தி.மு.க. அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களிடையேயும் ஒருவித பீதியை கிளப்பியுள்ளது. ஏனெனில், கடந்த சில காலமாகவே தி.மு.க. அமைச்சர்கள் பலரும் மத்திய ஏஜென்சிகளின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தில் கிடைத்துள்ள இந்த சட்டப்பூர்வ வெற்றி, மற்ற அமைச்சர்கள் மீதான பழைய ஊழல் வழக்குகளையும் தூசு தட்ட தொடங்கும். அதுமட்டுமில்லாமல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி பல அமைச்சர்கள் கோர்ட் கேஸ் ஜாமின் என தான் அலைவார்கள். என டெல்லி தகவல்கள் தெரிவிக்கிறது.
தற்போது ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜி மீண்டும் கைது செய்யப்பட்டால் கோயம்புத்தூர் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் . செந்தில் பாலாஜி கோவை மண்டலத்தின் தி.மு.க. 'சாணக்கியராக' பார்க்கப்பட்டவர். ஒருவேளை இந்த வழக்குகளின் தீவிரத்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் பட்சத்தில், கோவையில் மீண்டும் ஒரு தேர்தல் களம் காண வேண்டிய நிலை வருமோ என்ற அச்சம் உடன்பிறப்புகளிடையே எழுந்துள்ளது. டெல்லி மேலிடம் இந்த முறையை மிகக் கவனமாகத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முறை "மிஸ் ஆகாது" என்கிற ரீதியிலும் காய்களை நகர்த்தி வருகிறது.
அமலாக்கத்துறை வழக்கை விட சி.பி.ஐ. விசாரணை என்பது அதிகாரம் மிக்கது மற்றும் விரிவானது என்பதால், வழக்கின் போக்கு தி.மு.க.விற்குப் பெரும் சவாலாகவே இருக்கும்.. செந்தில் பாலாஜியை குறிவைத்துத் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆட்டம், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் ஒருவித பதற்றத்தில் வைத்திருக்கிறது என்பதுதான் தற்போதைய கள யதார்த்தம். "யாரை எப்போது எங்கே பிடிக்க வேண்டும்" என்பதில் டெல்லி காட்டும் வேகம், தமிழக அரசியலில் ஒரு மெகா திருப்பத்தை நோக்கியே நகர்கிறது.
