
இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஒரு புதிய வரலாறு உருவாகியுள்ளது. நாட்டின் புதிய தலைமுறை ஏவுகணையான “அக்னி-பிரைம்” (Agni-Prime) சமீபத்தில் ரயிலிலிருந்தே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை மூலம் இந்தியா தனது பாதுகாப்புத் திறனையும் எதிரிகளுக்கு எதிரான தடுப்பு ஆற்றலையும் உலகம் முழுவதும் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தியாவைச் சுற்றி உள்ள சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்ந்து பாதுகாப்பு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்த சோதனை இந்தியாவின் தற்காப்பு வலிமையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
அக்னி என்கிற பெயர் இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றின் முக்கிய அத்தியாயமாகும். 1990களில் தொடங்கிய அக்னி திட்டம், இன்று வரை நாட்டின் வலிமையின் அடையாளமாக இருந்து வருகிறது. அக்னி-1 முதல் அக்னி-5 வரை பல்வேறு மாடல்களில் வளர்ந்த இந்த வரிசையில், அக்னி-பிரைம் என்பது புதிய தலைமுறைக்கான முன்னேறியுள்ளது. , அக்னி-பிரைம் முழுக்க முழுக்க காம்போசிட் மேட்டீரியல்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் எடை குறைந்ததோடு, வேகமும் அதிகரித்துள்ளது. மேலும் இதன் ஏவுதல் முறையும் மிக எளிமையானதும் துல்லியமானதுமானதாக மாறியுள்ளது.
இந்த ஏவுகணை எந்த நேரத்திலும் உடனடியாக ஏவ முடியும். எந்தவொரு திரவ எரிபொருளும் தேவையில்லை. இதன் தாக்கும் தூரம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை விரிவடைந்துள்ளது. இந்த தூரம் இந்தியாவின் வடக்கு எல்லையிலிருந்து பாகிஸ்தானின் பெரும்பகுதியையும் சீனாவின் தெற்குப் பகுதிகளையும் அடையக்கூடியதாகும். அதாவது, இந்தியாவை நோக்கி யாரேனும் தாக்க முயன்றாலும் அதற்கான பதிலடி எப்போது வேண்டுமானாலும் வழங்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது.
அக்னி-பிரைம் ஏவுகணையின் மிகப் பெரிய பலம் அதன் துல்லியம். இதில் ரிங் லேசர் ஜைரோஸ்கோப் மற்றும் மைக்ரோ நெவிகேஷன் சிஸ்டம் போன்ற அதிநவீன வழிகாட்டும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் எதிரிகள் GPS-ஐ முடக்கினாலும், இதன் தாக்கு துல்லியமாக இலக்கை அடையும். 2025 செப்டம்பரில் நடந்த ரயில் சோதனை இந்தியாவுக்கு ஒரு புதியதிருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையின் மூலம் இந்தியா மொபைல் லாஞ்சிங் திறனைப் பெற்றுள்ளது. அதாவது, ஏவுகணையை எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும், ரயிலோ லாரியிலோ மறைத்து நகர்த்தி தாக்க முடியும். இதனால் எதிரி நாடுகள் இதை எப்போது, எங்கு இருந்து ஏவப்படும் என்பதை கணிக்கவே முடியாது. இத்தகைய மொபைல் மிசைல் திறனை உலகில் மிகக் குறைந்த நாடுகளுக்கே உள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பது பெருமைக்குரியது.
அக்னி-பிரைம் முழுமையாக இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இது DRDO, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் பல இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு கூறும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதால், வெளிநாட்டு சார்பு இல்லாத முழுமையான இந்திய பாதுகாப்பு சாதனையாக இது திகழ்கிறது. இதன் மூலம் “Make in India” திட்டத்தின் பெருமையும் வெளிப்படுகிறது.
அக்னி-பிரைம் ரயில் சோதனை ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; இது இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய பக்கமாகும். இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பும் திறனும் Make in India முயற்சியுடனும் இணைந்து உலக அரங்கில் மீண்டும் பெருமை பெற்றுள்ளது. அமைதிக்காக சக்தி வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்தியிருக்கும் இந்தியா, அக்னி-பிரைம் மூலம் தன்னுடைய சக்தியையும் தன்னம்பிக்கையையும் உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் தற்காப்பு திறனை மட்டுமல்ல; அதன் நம்பிக்கையும் முன்னேற்ற பாதையும் ஆகும்.
