24 special

ஆளுநரின் ஒற்றை கடிதத்தால் மாறப்போகும் திமுகவின் தலைஎழுத்து

Rn ravi ,mk stalin
Rn ravi ,mk stalin

தமிழக ஆளுநரை சந்தித்து பாஜக மாநில பெண் நிர்வாகிகள் கொடுத்த மனு வீண் போகவில்லை என்ற தகவல்தான் திமுகவிற்கும் செந்தில் பாலாஜிக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.கடந்த மே 21 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மகளிரணி பிரமுகர்கள் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர்.


அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக வேலைக்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப் பிரிவு போலீசார் இரண்டு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடித்தால் அவர் மீதான விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை.

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், பதவிப் பிரமாணத்துக்கு எதிராகவும் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் இருக்கின்றன. எனவே செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும். இதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இதை ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம்’ என்று செய்தியாளர்களிடம் பேசும்போது அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை கொடுத்த இந்த மனுவின் அடிப்படையில்… தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது பற்றித்தான் ஆளுநர் மாளிகையில் தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.இதற்கு எடுத்துகாட்டாக ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தேடினர். அதன் முடிவில் கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநில ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியதை கண்டறிந்தனர்.

கேரள நிதியமைச்சர் பாலகோபால் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பேசும்போது கேரள மாணவர்களையும் உத்திரப்பிரதேச மாணவர்களையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதைக் காரணம் காட்டி இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக அமைச்சர் பேசிவிட்டார். அதனால் அவர் மீது அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதை முன்னுதாரணமாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கும் நிலையில், அவர் மீது அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதலாமா என்பதுதான் ஆளுநர் மாளிகையில் நடந்திருக்கும் ஆலோசனை.

மாநில அரசின் அமைச்சரை நீக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க முடியுமா என்றும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளையும் கேட்டறிந்திருக்கிறார் ஆளுநர்,சட்ட வல்லுநர்கள் தரப்பில் கடிதம் எழுதலாம் ஆனால் நடவடிக்கை எடுக்க கூடிய அதிகாரம் முதல்வருக்கு தான் இருக்கிறது என விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆளுநர் எழுதிய கடிதம் மூலம் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்து நீக்க மாட்டார் என்று உறுதியாக ஆளுநர் மாளிகைக்கு தெரிந்தும், ஆளுநர் கடிதம் எழுத இருக்கிறாராம். ஆளுநருக்கு ஒருவரின் அமைச்சர் பதவியை பறிக்க அதிகாரம் இல்லை என்ற போதிலும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு போடும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது.

ஏற்கனவே டாஸ்மாக்கில் நடைபெறும் பல்வேறு குளருப்படிகளுக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என மக்களும் பல டாஸ்மாக் ஊழியர்களும் பேசிய வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது, மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்கிற்கு மது பானம் கொடுத்து வந்த நிர்வாகம் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறதாம். அதில் வலுவான ஆதாரங்களும் சிக்கி இருக்கிறதாம்.

ஒரு வேலை  முதல்வர் ஸ்டாலினுக்கு  ஆளுநர் கடிதம் எழுதிய நிலையில் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் உத்தரவு போட வாய்ப்பு இருப்பதாக ஆளும் கட்சி கருதுகிறதாம். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 மாதமே இருக்கிறது.இந்த சூழலில் ஆளுநர் கடிதம் எழுதினாலோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு போட்டாலோ ,  மக்கள் மத்தியில் திமுக மீதும் மீண்டும் ஊழல் கட்சி என்ற பிம்பம் விழுந்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் ஷாக்காகி இருக்கிறதாம் திமுக அரசு.