
இந்து சமய அறநிலையத்துறை மீதான குற்றசாட்டுகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றுதான் நீதியை பெறும் நிலையில் உள்ளது. இதற்கிடையே தான் அறநிலையத்துறை சம்பந்தபட்ட இரு வழக்குகளில் தமிழக அரசின் தலையை கொட்டியுள்ளது உயர்நீதிமன்றம்.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவில் மற்றும் மரத்தினாலான மண்டபத்தில் அமைந்து உள்ள கடைகளால், கோவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. விழா காலங்களில் அதிகரிக்கும் தற்காலிக கடைகளாலும் கோவிலின் பழமையான கட்டமைப்புகள் சேதமடைகின்றன. பழமையான கோவில்களில் வணிக ரீதியாக கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அந்த வகையில் நெல்லையப்பர் கோவிலை பாதுகாக்கவும், மரத்தினால் ஆன மண்டபத்தில் அமைந்து உள்ள கடைகளை உடனடியாக அகற்றவும் உத்தரவிட வேண்டும். என பொது நல வழக்கு ஒன்று தொடங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பழமையான கோவில் வளாகத்தில் வணிக ரீதியிலான கடைகளை அனுமதிக்கவில்லை. ஆனால் எதன் அடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பழமையான மண்டபத்தில் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்கள்
அப்போது அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி நேரில் ஆஜராகி, நெல்லையப்பர் கோவிலின் மரத்தினால் ஆன மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்
விசாரணை முடிவில், பழமைவாய்ந்த நெல்லையப்பர் கோவிலில் உரிய விதிகளை பின்பற்றி, மர மண்டபத்தில் செயல்படும் கடைகளை 12 வாரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோவிலிலும் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் கடைகளை அகற்றுவீர்களா என்றும் விதிகளை முறையாக பின்பற்றாமல் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வேறு என்ன வேலை என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பிகடைகளை அகற்ற கூறி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதே போல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றின் நிதியில் இருந்து திருமண மண்டபம் கட்ட தமிழக அரசு போட்ட அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதே போல் ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் பணத்தை எடுத்து ரூ.85 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது மேலும், கோவிலுக்கு சொந்தமான நிதியை எப்படி பயன்படுத்தலாம் எனவே, கோவில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பழனி முருகன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன்மற்றும் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில் நிதியை எடுத்து திருமண மண்டபம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. திருமண மண்டப பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ரவிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கோவில் நிதியை கோவிலின் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் உள்ளதால் கோவில் நிதியிலிருந்து திருமண மண்டபம் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர் "இதன் மூலம், கோவில் பணம் கோவில் காரியங்களுக்கே செலவு செய்யப்பட வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.