
தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் தங்களை தங்களே பாராட்டி விளம்பரம் செய்து வரும் திமுகவிற்கு, சமீபத்திய தேசிய ஊடக விவாதம் ஒன்று பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்திற்குள் இருக்கும் ஊடகங்களை அதிகார பலத்தாலும் விளம்பரங்களாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திமுக, தேசிய அளவில் முறையான தரவுகள் இன்றிப் பேச முற்பட்டுத் தற்போது இந்திய மக்கள் முன்னிலையில் கேலிக்குரிய பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் பங்கேற்ற அந்த விவாதத்தில், 'பராசக்தி' திரைப்படம் மற்றும் மொழிப்போர் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரியாமல் அவர் திணறிய விதம் அக்கட்சியின் உண்மை முகத்தைத் திரைகிழித்துக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்வோம் என்று மேடைக்கு மேடை வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், தேசிய அரங்கில் தனது பிரதிநிதிகள் மாநிலத்தின் நற்பெயரைச் சிதைப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்தி எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்துக்கொண்டு பல தசாப்தங்களாகத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் இரட்டை வேடம் இந்த விவாதத்தின் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தன என்பது வரலாறு. ஆனால், இன்றுள்ள உலகமயமாக்கப்பட்ட சூழலில், ஒருபுறம் இந்தி திணிப்பை எதிர்த்துக்கொண்டு, மறுபுறம் தங்கள் குடும்பத்தினர் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்திக்கு இடம் கொடுப்பது தான் திமுக. அவர்கள் குடும்பங்கள் அனைத்து மொழியையும் கற்று இன்றைய உலகிற்கு அப்டேட் ஆகலாம் ஆனால் சாமானிய மக்கள் அவுட்டேட் ஆக இருக்க வேண்டும் இதுதான் திமுகவின் ட்ரென்ட்ட் செட் .
அந்த வகையில், இந்தி திணிப்பு குறித்த ஆங்கில ஊடக விவாதத்தில், பா.ஜ.க பிரதிநிதி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் இப்போது அக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பது யார் என்று இந்தியைத் திணித்த காங்கிரஸை அன்றைய 'பராசக்தி' படத்தில் விமர்சித்துவிட்டு, இன்று அதே காங்கிரஸுடன் அதிகாரத்திற்காகக் கூட்டணி வைத்திருப்பது ஏன் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணனிடம் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் , வினோதமாகச் சிரித்து மழுப்ப முயன்ற சரவணனின் வீடியோ ட்ரெண்ட் ஆனது. திமுக செய்தித் தொடர்பாளரின் செயல், திமுக ஒரு கோமாளிகளின் கட்சியாகத் தேசிய அளவில் பார்க்கப்படக் காரணமாகிவிட்டது. தமிழகத்தில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் ஊடக நெறியாளர்களைப் போல் தேசிய ஊடகங்கள் இருக்காது என்பதை உணராமல் சென்ற திமுகவினருக்கு, அங்கு நிலவிய கடும் கேள்விக் கணைகள் 'கர்மா'வாகத் திரும்பியுள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல் புகார்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்கத் திரைத்துறையையும் ஊடகங்களையும் மடைமாற்றப் பயன்படுத்தும் திமுகவின் தந்திரம் இனி செல்லுபடியாகாது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில், அமைச்சர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் தோல்வி பயத்தில் உளறிக் கொட்டுவது அக்கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கத்தி கூப்பாடு போடுவதும், அடியாட்களை வைத்து மிரட்டுவதும் தமிழகத்தோடு முடிந்துவிடலாம், ஆனால் தேசிய அளவில் இத்தகைய செயல்பாடுகள் திமுகவின் அரசியல் வீழ்ச்சிக்கு எழுதப்படும் முன்னுரையாகவே பார்க்கப்படுகிறது. விளம்பரங்கள் மூலம் பிம்பத்தைக் கட்டமைக்க முயலும் திமுகவின் உண்மை நிலை, இது போன்ற நேரடி விவாதங்களில் தற்காப்பு ஏதுமின்றித் தோற்றுப் போவதையே காட்டுகிறது.
