
எப்போது பார்த்தாலும் விளம்பரம் செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அரசாக மாறியுள்ளது திமுக அரசு. அதன் நிர்வாகத்தின் மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக மக்கள் வரிப்பணத்தில் எங்கு பார்த்தும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை விளம்பரம் செய்து மக்களே முகம் சுழித்து விட்டார்கள். திமுக அரசு.ஊடகங்கள் பத்திரிக்கைக்களுக்கு இதுவரை விளம்பரம் செய்த செலவு எவ்வளவு என தெரிந்தால் தலையே சுற்றிவிடும். போக்கிரி படத்தில் வரும் டயலாக் தான் நியாபகம் வருகிறது வாய் மட்டும்தான் வேலை செய்கிறது. எல்லாம் வாய் ஜாலம் மட்டுமே என மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் தான் தமிழக அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள், தேவையான துறைகளில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
வழக்கமாக அனைத்து துறைகளும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்துத் தயாரிக்கப்படும் அனைத்து விதமான செய்திக் குறிப்புகளும் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்பணிகளை மேற்கொள்வதற்காகத் தலைமைச் செயலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். துறை சார்ந்த செயல் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தாலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திமுக அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக அரசியல் நோக்கத்தில் அரசு நிர்வாகத்தையே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தொடங்கிவிட்டது, நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த தமிழக அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. துறை சார்ந்த செயல் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்தாலும், அது வெளிப்படையாக திமுகவின் தேர்தல் பிரச்சார முயற்சியின் ஒரு பகுதியாகவே தெரிகிறது. இதுவே, தமிழக அரசின் ஊடகக் கொள்கையை சீர்குலைக்கும் அபாயகரமான தொடக்கமாகும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன இந்த நிலையில் தான் அரசு அதிகாரிகளை அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருப்பதோடு, திமுக அரசின் தலைமைக்கு மிக நெருக்கமானவர்களாக அறியப்படும் அதிகாரிகள் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் நகர்வுகளும் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
உள் மற்றும் காவல்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற முக்கியமான துறைகளைக் கையாளக்கூடிய அரசு அதிகாரிகளைச் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்திருப்பதன் மூலம் அவர்கள் ஏற்கனவே செய்து வந்த பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் திமுக அமைச்சர்கள் மீது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியை, அதிகாரிகளை வைத்துச் சரிசெய்யலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலும் திமுக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கான வியூக வகுப்பாளர்களாக அரசு அதிகாரிகளை திமுக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது.மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்கள் நலனுக்கான திட்டங்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்புகளை வகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, திமுகவின் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன. மொத்த IAS அதிகாரிகளும் இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.