
அதிமுகவை வலுப்படுத்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் செங்கோட்டையன் இறங்கியுள்ளதாகவும், இதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.இதற்கிடையில் தனது மனதில் இருக்கும் அனைத்து விவரங்களையும் வரும் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார். இதன்பின், ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவதாக கூறப்பட்டது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் முக்கியமானவராக அறியப்பட்ட செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. திமுகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் நீடிக்கும் நிலையில், அதிமுக – பாஜகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக – பாஜகக் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முயற்சி பலனளிக்காத நிலையில், வலுவான கூட்டணியை அமைத்து வெற்றிப் பெற வேண்டும் என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் எனப் பல்வேறு அணிகளாக அதிமுகப் பிரிந்து செயல்படுவதே கடந்த சட்டமன்றத் தேர்தல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து வருவதற்கான காரணங்களாகக் கூறப்பட்டது.
சசிகலாவின் அறிக்கை வெளியான சில தினங்களிலேயே செங்கோட்டையன் மனம் விட்டு பேசப்போவதாக அறிவித்திருப்பது அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான முயற்சியாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளும் பட்சத்தில், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஒன்றிணையும் வாய்ப்பு உருவாகும் எனவும் கருதப்படுகிறது.
அவ்வாறு ஒன்றுபட்ட அதிமுக இணையும் பட்சத்தில், திமுகவுக்குத் தோல்வி உறுதியாகும் என்பதால் அக்கட்சியினர் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற்ற வாக்குகளே தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவைக் கட்டமைக்கும் நேரத்தில், டிடிவி தினகரனைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துப் போட்டியிடும் பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதால் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். செப்டம்பர் 5 ஆம் தேதி செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, அதிமுகவினர் காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக இணைந்துவிடுமோ எனத் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.