
உலக அரசியல், உலக வர்த்தகம் – எங்கு பார்த்தாலும் இன்று பேசப்படும் பெயர் இந்தியாதான் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா தன் பங்கு மற்றும் தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தற்போது பத்து நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்க இந்தியா தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கத்தார், ஓமன், பெரு, இலங்கை, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய EFTA கூட்டமைப்புடனும், சிலி, அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளைக் கொண்ட மெர்கோசூர் கூட்டமைப்புடனும் இந்தியா விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, தங்கள் தடைகளை கடுமையாக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார் அதை ஐரோப்பிய நாடுகளும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. வரும் காலங்களில் இந்த வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருதரப்பு வர்த்தகம் ஏற்கனவே 137 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதை முடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
இது வெறும் வணிகம் இல்லை – இந்தியாவின் சர்வதேச புகழையும், பொருளாதார வலிமையையும் உயர்த்தும் ஒரு மாபெரும் திட்டம். ஒருகாலத்தில் இந்தியாவை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்த அமெரிக்காவிற்கு, இது நேரடி சவாலாகி விட்டது. “நாங்கள் உலக சந்தையில் நமது இடத்தைப் பிடித்து விடுவோம், யாராலும் தடுக்க முடியாது” என்பதே இந்தியாவின் மறைமுகமான அறிவிப்பு ஆகும்
இந்த நிலையில் இந்தியாவின் இன்னொரு துணிச்சலான முடிவு ரஷ்யாவுடன் எரிசக்தி உறவைத் தொடர்வதே. உக்ரைன் போருக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு தடைகள் விதித்து உலக வர்த்தகத்தில் விலக்க முயன்றபோதும், இந்தியா “தேசிய நலனே எங்களின் முதல் முன்னுரிமை” என்று அறிவித்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்கிறது. சலுகை விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய், இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் உயிர்க்காக்கும் மருந்தாக உள்ளது.
இன்றைய சூழலில் இந்தியா வெறும் இறக்குமதியாளர் அல்ல, முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தங்களை கைப்பற்றுவது முதல், ரஷ்யாவுடனான எரிசக்தி உறவை பாதுகாப்பது வரை, இந்தியா தன் பாதையை தானே தேர்ந்தெடுக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் அழுத்தத்துக்கும் பணியாமல், தன் சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தும் நாடாக இந்தியா உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு உலகத்திற்கு மிகத் தெளிவான ஒரு செய்தியை சொல்கிறது – “இந்தியா யாரின் கட்டுப்பாட்டிலும் இயங்காது, எங்கள் நாட்டின் நலனே எங்களின் இறுதி முடிவு!” மேற்கு நாடுகளுடனும், ரஷ்யாவுடனும் உறவுகளை சமநிலைப்படுத்தும் திறன், இந்தியாவை ஒரு சுயாதீன உலக சக்தியாக நிரூபிக்கிறது.