
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை ஓரம் கட்ட நினைத்த ட்ரம்ப், முதலில் இந்தியாவை குறிவைத்தார். முதலில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், மோடி அரசு அசைந்து கொடுக்காததால் மேலும் 25 சதவீத வரி விதித்தார். இதற்கும் இந்தியா பெரியளவில் அலட்டி கொள்ளாத போதும், பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை ரகசியமாக மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியா நாளொன்றுக்கு 1.6 மில்லியன் அளவுக்குதான் கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. ஜூலை மாதம் 1.6 மில்லியன் பேரல்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 2 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வாங்கும் எண்ணெயின் அளவு குறைத்துள்ளது. ஜூலையில் 907,000 பேரல்களாக இருந்த ஈராக் எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 730,000 பேரல்களாகவும், சவுதி அரேபியாவிலிருந்து 700,000 பேரல்களாக இருந்தது 526,000 பேரல்களாகவும் குறைந்துள்ளது. அமெரிக்காவிடமிருந்தும் நாம் எண்ணெய் வாங்குகிறோம். 2,64,000 பேரல்களுடன் எண்ணெய் சப்ளை லிஸ்ட்டில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் கடந்த ஜூலை மாதம் இறுதியில் இந்திய மீது வரியை போட்டார். அதன் பிறகுதான் இந்தியா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது என்பது கவனிக்கத்தது. தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி சீராக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் அர்விந்தர் சிங் சானி கூறுகையில், "ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரியால் பயந்துபோய், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தும் ஐடியா ஏதும் இல்லை. எங்களை வாங்கவும் சொல்லவில்லை, வாங்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ரஷ்ய கச்சா எண்ணெயின் பங்கை அதிகரிக்கவோ குறைக்கவோ நாங்கள் கூடுதல் முயற்சி செய்யவில்லை" என்று கூறினார்
உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளரான இந்தியா, கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிடமிருந்து சலுகையில் விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. இந்த தடையை தொடர்ந்து ரஷ்யா தனது எண்ணெய்யை குறைந்த விலையில் விற்க முடிவெடுத்தது. இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிறது.
போருக்கு முன்பு இந்தியாவின் இறக்குமதியில் 0.2% க்கும் குறைவாக இருந்த ரஷ்ய எண்ணெய், இப்போது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 35-40% ஆக உள்ளது. எனினும், ஒரு பேரலுக்கு $40 ஆக இருந்த தள்ளுபடிகள் கடந்த மாதம் $1.5 ஆகக் குறைந்துவிட்டன. இந்த மாதம் தள்ளுபடிகள் ஒரு பேரலுக்கு $2 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு பகுதியாகத்தான், ட்ரம்ப் – புதின் சந்திப்பும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், இந்தியா உடனான வர்த்தகத்தை இழந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில்கூட புதின் தன்னை சந்திக்க நினைத்திருக்கலாம் என கூறியுள்ளார். எப்படி பார்த்தாலும் தனது அரசின் வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு சாதகமாகவே அமைந்திருப்பதாக, மார்தட்டி கொள்கிறார் டொனால்டு ட்ரம்ப்.