World

எங்க கிட்ட உங்க வேலையை காட்ட வேண்டாம்...! உடனே வெளியேற வேண்டும் கிருஷ்ணசாமி சூப்பர் பதில்..!

modi and kirshnasamy
modi and kirshnasamy

வெளியுறவுக் கொள்கையில்,இந்தியாவிற்கு அமெரிக்கா பாடம் எடுக்கக் கூடாது! உக்ரைன் - ரஷ்யா போரில் நடுநிலை வகிப்பது இந்தியாவின் உரிமை! இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டைச் சீர்குலைக்க பிடன் முயற்சி நேட்டோவை (NATO) போன்றே, குவாட்டும் (QUAD) ஒரு ராணுவ கூட்டமைப்பே.QUAD அமைப்பில் இந்தியா இருப்பது நன்மை பயக்காது, ‘கேடே’ நேரிடும்!


QUAD-லிருந்து இந்தியா உடனடியாக வெளியேறி விட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார் இது குறித்து கிருஷ்ணசாமி தெரிவித்தாவது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ’குவாட் – QUAD’ அமைப்பு உருவான போதே ‘அந்த அமைப்பில் இந்தியா சேர்வது நலன் பயக்காது; QUAD மூலம் இந்தியாவுக்கு கேடுதான் நேரும்’ என்று இரண்டு வருடங்களுக்கு முன்பே முகநூலில் இதுகுறித்து தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

இந்த QUAD அமைப்பு நமது நாட்டிற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஓர் அமைப்பு. இந்தியாவிலிருந்து அமெரிக்கா பல கண்டங்களுக்கு அப்பால் இருக்கிறது; ஆஸ்திரேலியாவும் ஒரு தனிக் கண்டம்; ஜப்பானும் வெகுதூரம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத ஒரு கூட்டமைப்பில் இந்தியாவைப் போல வளர்ந்து வரக்கூடிய ஒரு நாடு சேர்வதில் நன்மையை காட்டிலும் தீமைகளே அதிகம்.

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் உள்நோக்கம். அமெரிக்கா பசுபிக் பிராந்தியத்தில் தன்னிச்சையாக செயல்படுவதற்கு நிலப்பரப்பு இல்லை. எனவே, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளை தான் பயன்படுத்திட வேண்டும். அதற்கு ஏற்றார்போல் சீனாவிற்கும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் பிரச்சினை உண்டு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சினை உண்டு. ’எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே சீனாவோடு முரண்பட்டு இருக்கக்கூடிய நாடுகளை ஒன்றிணைத்து சீனாவிற்கு எதிராக ’QUAD’  அமைப்பை அமெரிக்கா உருவாக்கியது.

அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது ராணுவத் தளவாட உற்பத்தியும், அதன்  விற்பனையுமே. அதைச் செவ்வனே செய்வதற்காகவே ஏற்கனவே அமெரிக்கா தலைமையில் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ’NATO - நேட்டோ அமைப்பு’  உருவாக்கப்பட்டது. அது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு ராணுவ கூட்டமைப்பு. அதேபோல தான், சீனாவுக்கு எதிராக மட்டுமே உருவாக்கப்பட்டது QUAD அமைப்பு.

இந்திய நாட்டிற்கு என ஒரு தனி வரலாறு உண்டு. வெளிநாட்டு கொள்கைகளில் அணிசேராக் கொள்கையையும், நடு நிலையையும் மட்டுமே வகித்து வந்திருக்கிறது. வெளியில் QUAD அமைப்பு ’கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கான அமைப்பு’ என்று அமெரிக்கா சொன்னாலும், நேட்டோவை போன்றே ஒரு ராணுவ கூட்டமைப்பாகக் குவாட்டை கட்டி  அமைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். சாதாரணமாக ஒரு அணிக்குள் சென்று விட்டாலே, அணித்தலைவர் கட்டளைக்கு அடிபணிய வேண்டும். 

ரஷ்யாவைக் காட்டி நேட்டோவை உருவாக்கி, இப்பொழுதே நேட்டோ உறுப்பு நாடுகளை மட்டுமல்ல, அதற்கு வெளியே இருக்கக்கூடிய  உக்ரைனையும் அமெரிக்கா  ஆட்டிப்படைக்கிறது. உக்ரைன் - ரஷ்யப் போர் தொடங்கி 28 நாட்கள் முடிந்து, 29 வது நாளும் நீடிக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு, இரண்டு நாடுகளுக்கு இடையே இத்தனை நாட்கள் நீடிக்கக்கூடிய மிகப் பெரிய மோதலை உலக மக்கள் இப்பொழுதுதான் பார்க்கிறார்கள்.

உக்ரைன் நாட்டிலிருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடந்த 28 நாட்களாக நடந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள், அரசின் முக்கிய கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. கடந்த இரண்டு மூன்று தினங்களாக உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மெலிடா போல்,  மரியுபோல் உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து விட்டதாகவும், அந்த வளையத்தைத் தாண்டி சாதாரண மக்கள் கூட வெளியேற முடியாத அவல நிலை உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேற்கத்திய நாடுகள் போரை நிறுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்காமல் போரைத் தொடர உக்ரைனுக்கு அனைத்து வித ஆயுத உதவிகளை மட்டுமே செய்கின்றன. இப்பொழுது அந்த யுத்ததில் இந்தியாவையும் இழுத்து விட அமெரிக்கா முயற்சிக்கிறது.

அமெரிக்காவின்  நோக்கம் என்ன? என்பது நேற்று பிடன் அவர்கள் வாஷிங்டனில் பேசிய பேச்சுகளிலிருந்து தெளிவாகிறது. அதாவது உக்ரைன் மீதான ரஷ்யப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை ”India's ’shaky’ response to Putin’s actions” என்று குற்றம் சுமத்துகிறார்.

அதாவது, உக்ரைன் மீதான புட்டின் படையெடுப்பை QUAD அமைப்பில் உள்ள இந்தியாவைத் தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் உறுதியாக எதிர்க்கின்றபொழுது, இந்தியா மட்டும் இதில் ’தடுமாறுகிறது’ என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். ’பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ என்பதை போன்று அமெரிக்காவின் உண்மை சொரூபம் வெளிவந்துவிட்டது. அதாவது ஒரு அணி சேர்கின்றபொழுது அணியில் இருக்கக்கூடிய நாடுகளெல்லாம் ஒத்த கருத்தோடு செயல்பட வேண்டும்.



அணிக்கு தலைமை தாங்கக் கூடியவர்களின் சொல் பேச்சைக் கேட்க வேண்டும். ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா விருப்பப்படி இந்தியா நடக்கவில்லையென பிடன் பேசியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அபத்தமான பேச்சு. பிடன் உக்ரைன் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்திருப்பது ’பெரிய அண்ணன் மனப்பான்மை (Big Brother Attitude) அல்லது ஏகாதிபத்திய மனப்பான்மை ஆகும். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தங்களுடைய சுய நலன்களுக்காக நடத்தக்கூடிய இந்த அவசியமற்ற உக்ரைன் போரில், இந்தியா திடீரென்று ஒருதலைபட்சமான முடிவை எடுத்து விட முடியாது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசம், ஒரு சுதந்திர ஜனநாயக நாடு மட்டுமல்ல, முழு இறையாண்மை மிக்க தேசம், வெளிநாட்டு விவகாரங்களில் இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது அமெரிக்காவுக்கும் பொருந்தும். ஆனால், இந்தியாவின் நடுநிலைமையை உலக நாடுகள் பாராட்டுகின்றபொழுது, அமெரிக்கா ஏகாதிபத்தியத்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய – சீன கல்வான் பிரச்சனை உருவானபோதே, QUAD-ல் இந்தியா சேருவதை மனதில் வைத்து உருவான பிரச்சனையாகத்தான் இது இருக்க கூடும் என ஏற்கனவே சுட்டிக் காட்டி இருந்தோம்.

இந்தியாவுக்கு என்று வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒரு தனி வரலாறு உண்டு. இந்தியாவினுடைய வரலாற்றில் தனது பாதுகாப்பிற்காகத் திருப்பித் தாக்கி இருக்கிறதே தவிர, எந்த மண்ணையும் ஆக்கிரமிப்பதற்காகப் போர் தொடுத்ததாக வரலாறு இல்லை. அதேபோல எந்தப் போரிலும் இந்தியா எந்நாட்டையும் சார்ந்து நின்றதில்லை. ஒரு கோடிக்கு மேற்பட்ட பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழல் இருந்ததால்தான் பங்களாதேஷ் போரில் இந்தியா தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.  மற்ற நாடுகளைப் போலப் போர்தொடுத்து இந்தியாவினுடைய ஒரு மாகாணமாக பங்களாதேஷை இணைத்துக் கொள்ளவில்லை.

அன்றைய காலகட்டங்களில் கூட, இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளாத அமெரிக்கா “7 FLEET” என்ற விமானம் தாங்கி கப்பலை இந்து மகா கடலுக்கு அனுப்பி வைத்தது. தற்போது இந்தியாவினுடைய சரியான அணுகுமுறையின் காரணமாகத் தான் உக்ரைனில் சிக்கித்தவித்த 25,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஒத்துழைப்போடு மீட்க முடிந்தது.  இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் லட்சக்கணக்கான சாதாரண மக்கள் தங்களுடைய நிலங்களிலிருந்து அகதிகளாக வெளியேறக்கூடிய அவலநிலையை நாம் மட்டுமல்ல, எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. இந்தப் போர் பல வழிகளிலும் இந்திய மக்களையும் பாதிக்கத்தான் செய்கிறது. நாளை எப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்பது தெரியாது.lஆனால், இந்த நிமிடம் வரையிலும் இந்தியா இதில் நடுநிலையோடு இருப்பதைச் சரியான வெளிநாட்டுக் கொள்கையாகவே பார்க்க முடிகிறது.

இந்த நடுநிலை நிலைப்பாடு பிடனுக்கும் அமெரிக்காவிற்கும் கோபத்தை உருவாக்கக்கூடும் எனத் தெரிந்திருந்தும் கூட ஒரு உறுதியான நிலைப்பாட்டை பாரத பிரதமர் மோடி அவர்கள் எடுத்திருக்கிறார். மோடி அவர்களின் இந்த உறுதியான நிலைப்பாட்டை எப்படியாவது மாற்றி ரஷ்யாவுக்கு எதிராக இந்தியாவை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பொழுது பிடன் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்திருக்கிறார். இது நமது மூக்கை சொரிந்து விடக்கூடிய வேலைதான். ஆனால், எக்காலத்திலும் இந்தியாவிற்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்தது இல்லை என்பதே வரலாறு.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயையும், நவீன ஆயுதங்களையும் கொடுத்து பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிராகத் திருப்பியதே அமெரிக்காதான். இறையாண்மை மிக்க நாடான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. இந்தியாவை ரஷ்யாவுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்றே பிடன் இந்தியாவை விமர்சனம் செய்கிறார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது; கூடாது. இந்தியா உக்ரைன் பக்கம் சாய்ந்தால், இந்தியாவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற கூட்டமைப்பு உருவாக அதுவே வாய்ப்பளித்து விடும்.

இந்தியாவை உக்ரைன் பக்கம் தள்ளி உலக அளவில் உள்ள இந்தியாவிற்கான நற்பெயரைக் கெடுக்க அமெரிக்கா விரும்புவதாகவே தெரிகிறது. இந்தியாவும் மோடியும் அமெரிக்காவிடமிருந்து மட்டுமல்ல, அமெரிக்கா உருவாகியிருக்கிற QUAD அமைப்பிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவிற்கு அமெரிக்கா பாடம் எடுக்கக் கூடாது! 

உக்ரைன் - ரஷ்யா போரில் நடுநிலை வகிப்பது இந்தியாவின் உரிமை! இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டைச் சீர்குலைக்க பிடன் முயற்சி! நேட்டோவை (NATO) போன்றே, குவாட்டும் (QUAD) ஒரு ராணுவ கூட்டமைப்பே!! QUAD அமைப்பில் இந்தியா இருப்பது நன்மை பயக்காது, ‘கேடே’ நேரிடும்! QUAD-லிருந்து இந்தியா உடனடியாக வெளியேறி விட வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.