
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, பிரசாரத்துக்குச் சென்ற இடமெல்லாம், “அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஊழல் செய்த அ.தி.மு.க அமைச்சர்களை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைப்போம்” என்று சூளுரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற 75-வது நாளில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டுக் கதவைத் தட்டியது லஞ்ச ஒழிப்புத்துறை. அடுத்தடுத்து வேலுமணி, தங்கமணி, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி என ஒன்பது மாஜி அமைச்சர்கள்மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு பரபரப்பை எகிறவைத்தன. ஆனால், அதன் பிறகு ஒரு இன்ச்கூட நகரவில்லை அந்த வழக்குகள்
“தி.மு.க ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், வழக்கை எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் எவர்மீதும், இதுவரையில் குற்றத்தை நிரூபிக்கவில்லை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. சென்னை உயர் நீதிமன்றமே, ‘முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பலமுறை உத்தரவிட்டும்கூட, அதையும் சட்டைசெய்யாமல் கள்ள மௌனம் காக்கிறது தி.மு.க அரசு
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட இந்த வழக்குகள் எல்லாமே, வெறும் வழக்குகளாக மட்டுமே கிடக்கின்றன. யார்மீதான குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் விவாதமாகியிருக்கிறது. இதுவரையில், முன்னாள் அமைச்சர்களான ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் ஆகிய மூவர்மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில்தான், குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. மற்றவர்கள்மீது இதுவரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகவில்லை.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க முக்கியப் புள்ளிகள்மீது சோதனை நடத்தி, வழக்குகளைப் பதியச் சொல்லி உத்தரவு வந்தது. அதற்கு முன்னர் பத்தாண்டுகள் அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்ததால், எவரைப் பற்றியும் துல்லியமான தரவுகள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கவில்லை. ஆனாலும், பெரும் சிரமத்துக்கு இடையில், அரசியல் அழுத்தங்களுக்கு காரணமாக ஒன்பது மாஜிக்கள் மீது ரெய்டுகளை நடத்தினோம். வழக்குகளும் பதியப்பட்டன.
முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு பதிவுசெய்ய, கிட்டத்தட்ட 1,000 இடங்களுக்கு மேல் சோதனைகளை நடத்தியுள்ளதாம் லஞ்ச ஒழிப்பு துறை. அந்தச் சோதனைகளில் வலுவான ஆதரங்கள் சிக்கவில்லை அதன் காரணமாகவே , சட்டப்படி விரைந்து எங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஆட்சி மேலிடத்திலிருந்து பெரும் அரசியல் அழுத்தம் தரப்படுகிறது. அதனால்தான், மூன்று மாஜி அதிமுக அமைச்சர்களை தவிர மற்ற எவர்மீதும், எங்களால் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியவில்லை. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டாலே, குற்றத்தில் பாதி நிரூபணம் ஆகிவிட்டதாகத்தான் அர்த்தம். அதையே எங்களால் செய்ய முடியாத அளவுக்கு, தான் இருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை.
“தி.மு.க-வுக்கு, கொள்ளையடிப்பதற்கு ஆள் தேவைப்படுவதாலும், ‘டீல்’ போட்டுக்கொண்டு அரசியல் செய்வதாலுமே முன்னாள் மாஜிக்கள் மீதான வழக்குகள் ஒரு இன்ச்கூட நகர்வதில்லை”ஆட்சியே முடிவுறும் தறுவாய்க்கு வந்துவிட்ட போதிலும், முன்னாள் மாஜிக்கள்மீது பதியப்பட்ட எந்த வழக்கிலும் இதுவரையில் தீர்ப்பைப் பெற்றுத்தரவில்லை, தி.மு.க அரசு. ‘மேலிட பிரஷர்’ எனச் சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒதுங்கிக்கொண்டுவிட்டது.
அ.தி.மு.க ஆட்சியாளர்கள்மீது தான் சுமத்திய எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஒரு விடையைக் கொடுக்கவில்லை ஸ்டாலின். . “நீங்கள் எல்லாம் யோக்கி யர்களா.. என அ.தி.மு.க தலைவர்களைப் பார்த்து திமுக கேட்டால், “ஆமாம். அப்படி இல்லையென்றால், எங்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே...” என அவர்களிடமிருந்து எதிர்க் கேள்வி வரும். ஆக, கேள்வியே கேட்க முடியாத இடத்தில் சிக்கியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.