
மத்திய மோடி அரசு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் தொடர்ந்து வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு.இதற்கிடையே சென்னை- விழுப்புரம் இடையே செங்கல்பட்டு வழியாக, அதிவிரைவு போக்குவரத்து ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு 1மணி நேரத்தில் செல்ல முடியும்.
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு, அதிவிரைவு பொது போக்குவரத்து சேவை இன்றியமையாததாக இருந்து வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, புதுடெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, தமிழ்நாட்டிலும் முக்கிய நகரங்களில் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது
சென்னைக்கு அருகே இருக்கும் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக வேலூர் இருந்து வருகிறது. வேலூரில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு பல்வேறு தேவைக்காக வந்து செல்கின்றனர். வேலூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், பெரும்பாலானோர் சாலை மார்க்கமாக வரவேண்டிய சூழல் உள்ளது. சாலை மார்க்கமாக பொது போக்குவரத்து மூலம் வேலூரில் இருந்து சென்னை வரவேண்டும் என்றால், 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, கூடுதலாகவும் நேரத்தை எடுத்துக் கொள்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில் சென்னையிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேலூருக்கு, ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி சாத்திய கூறுகள் தயாரிப்பதற்கான "டெண்டர்" விடப்பட்டது.
மெட்ரோவை விட வேகமாக செல்லக்கூடிய ரயில் போக்குவரத்து அமைப்பாக இந்த அமைப்பு இருக்கும். இந்த ரயில் வழித்தடம், ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் ரயில்கள் சுமார் 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்திற்கு இயக்கப்படும். இந்த ரயில் வழித்தடம் மூலம் பரந்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஆர்.டி.எஸ் மிக அதிவேக ரயில் மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும் தமிழகத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய ஆர்.ஆர்.டி.எஸ் மிக அதிவேக ரயில் சேவையை மூன்று வழித்தடங்களில் இயக்கப்படும். இந்தப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
10 முதல் 15 இடங்கள் வரை ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக 160-கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் சேவை இயக்கப்படும். இந்த ஆர்.ஆர்.டி.எஸ் அதிவேக ரயிலில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, சுழலும் வகையிலான இருக்கைகள், இலவச வைஃபை வசதி, செல்போன் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்யும் வகையிலான மின்சார இணைப்பு பிளக், நவீன கழிப்பறைகள், பயணிகளின் உடைமைகள் சேமிப்பு பகுதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதி ஆகியவை அமைய உள்ளது.
இதில், உள்ள இருக்கைகள் சுழலும் வகையில் அமைக்கப்படுவதால் பயணிகள் ஒருவருக்கொருவர் எதிர் எதிரே அமர்ந்து பேசிக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், பயணிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும், பயணிகளுக்கு ரயில் நிலைய நிறுத்தங்கள் குறித்து தெரிவிப்பதற்காக டிஜிட்டல் திரைகள் மற்றும் ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட உள்ளன.
