
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.அப்போது பேசிய அவர், அடிப்படை உறுப்பினர்களால்தான் அதிமுக தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்ஜிஆரின் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.
அந்த வகையில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது
தேர்தல் நேரத்தில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, உதயநிதியை மக்கள் அமைச்சராக்க விரும்புகிறார்கள் என்று திமுகவினர் அவர்களாகவே சொல்லி வருகிறார்கள். கலைஞர், மு.க.ஸ்டாலினை அரசியலில் நிதானமாக, பக்குவமாக வளர்த்தார். ஆனால் உதயநிதியை அமைச்சராக நினைப்பது பாஸ்ட்புட் அரசியலாகும்.
எங்களை அடிக்கடி போராட்டம் நடத்த வைக்காதீர்கள் உடனடியாக பொங்கல் பரிசு மாதம் 5 ஆயிரம் வழங்கவேண்டும் என்றும் அதனை ஆவணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினை உலக ஆணழகன் என சிவி சண்முகம் கிண்டல் செய்த நிலையில் தற்போது செல்லூர் ராஜு பாஸ்ட் புட் என புதிய அடையாளம் கொடுத்து இருப்பது இணையத்தில் கிண்டலை உண்டாக்கியுள்ளது.