
உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தேசம் தனது இறையாண்மையையும் பொருளாதார நலனையும் எவ்வாறு சமரசமின்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிகழ்த்திக்காட்டியுள்ள இந்த 'வர்த்தகப் போர்' வெற்றி ஒரு மிகச்சிறந்த பாடமாகும். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, இந்தியப் பொருட்களின் மீது ஒட்டுமொத்தமாக 50 சதவீத வரிச்சுமையை ஏற்றியபோது உலக நாடுகள் இந்தியாவின் நிலையை உற்றுநோக்கின. ஒருபுறம் ஆசியாவின் வளர்ந்து வரும் வல்லரசு, மறுபுறம் அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடி என இக்கட்டான சூழல் நிலவியபோது, பிரதமர் மோடி அவர்கள் காட்டிய நிதானமும் முதிர்ச்சியும் உலக அரங்கில் இந்தியாவை மிக உயர்ந்த இடத்தில் அமரவைத்துள்ளது.
இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றிய மோடியின் ராஜதந்திரம் வியக்கத்தக்கது. அமெரிக்கா தனது சந்தையை மூடுவேன் என்று மிரட்டியபோது, பிரதமர் மோடி அவர்கள் சத்தமில்லாமல் உலக வரைபடத்தின் மற்ற திசைகளில் இந்தியாவின் வர்த்தகக் கதவுகளை அகலத் திறந்தார். பிரிட்டனுடன் 2026-ல் நடைமுறைக்கு வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்தியப் பொருட்களுக்குக் கிடைத்த நூறு சதவீத வரிவிலக்கு போன்றவை இந்தியாவின் ஏற்றுமதி சந்தையைத் திசைமாற்றின. குறிப்பாக, சுவிட்சர்லாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்துடன் (EFTA) மோடி மேற்கொண்ட ஒப்பந்தம், இந்தியாவிற்கு 100 பில்லியன் டாலர் முதலீட்டை உறுதி செய்தது மட்டுமல்லாமல், அமெரிக்காவை ஒருவிதமான தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.
இந்தியா தனது வர்த்தகப் பார்வையை ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் தீவிரமாகத் திருப்பியதுதான் டிரம்ப்பின் பிடிவாதத்தை உடைத்த மிக முக்கியமான 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' ஆகும். இந்தியாவைத் தனிமைப்படுத்துவதாக நினைத்து அமெரிக்கா ஒதுங்கினால், உலகிலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தையான இந்தியாவை ஐரோப்பிய நாடுகள் முழுமையாகக் கைப்பற்றிவிடும் என்பதைத் தனது நுணுக்கமான பேச்சுகள் மூலம் மோடி டிரம்ப்பிற்கு உணர்த்தினார். இந்த 'ஐரோப்பிய கார்டு' டிரம்ப்பின் வர்த்தக வியூகத்தை நிலைகுலையச் செய்தது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தையை இழக்கத் தயாராக இல்லை என்ற உள்நாட்டு அழுத்தமும் டிரம்ப்பைச் சூழ்ந்தது.
இதன் உச்சகட்டமாகவே நேற்று இரவு இரு தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல் அமைந்தது. ஒரு காலத்தில் மிரட்டலாகத் தொடங்கிய விவாதம், மோடியின் தீர்க்கமான வாதங்களால் இந்தியாவின் வெற்றியில் முடிந்தது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் அபராத வரியைத் டிரம்ப் முற்றிலுமாகத் திரும்பப் பெற்றார். அதுமட்டுமின்றி, அடிப்படை வரியையும் 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார். இதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்ட 50 சதவீத வரிச்சுமை ஒரே இரவில் 18 சதவீதமாகச் சரிந்தது, இது இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்கச் சந்தையில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை உறுதி செய்துள்ளது.
அதேசமயம், எரிசக்திப் பாதுகாப்பிலும் மோடி ஒரு சமநிலையை எட்டியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொள்ளச் சம்மதித்தாலும், அதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் வெனிசூலாவிடமிருந்து மிகவும் சாதகமான மற்றும் மலிவான விலையில் எரிசக்தியைப் பெறுவதற்கான உறுதிமொழியை அவர் பெற்றுள்ளார். இது இந்தியத் தொழில்துறையின் உற்பத்திச் செலவைக் குறைத்து, பொருளாதாரத்தை அதிவேகமாக வளர்க்க உதவும். 140 கோடி இந்தியர்களின் பெருமிதமாகத் திகழும் பிரதமர் மோடியின் இந்த ராஜதந்திர வெற்றி, இந்தியா இனி ஒரு நாட்டை மட்டும் சார்ந்து நிற்கும் தேசம் அல்ல, மாறாக உலக வர்த்தகத்தைத் தீர்மானிக்கும் ஒரு 'குளோபல் ஹப்' என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
