
வரும் சட்டமற்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுக்கும் தயாரகி வரும் நிலையில் திமுகவில் நிலவி வரும் அதிகார மமதை மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அடிமைகளாக நடத்தும் மனப்போக்கு சமீபகாலமாக அத்துமீறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு நடிகர் போஸ் வெங்கட்டின் சமீபத்திய பேட்டியே ஒரு சாட்சியமாக அமைந்துள்ளது. காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே சரியான உறவு இல்லை. கூட்டணி தர்மம் என்பதைத் தாண்டி திமுகவினர் தங்களை ஒரு எஜமானர் தோரணையில் நிறுத்திக் கொண்டு மற்ற கட்சிகளை கிள்ளுக்கீரையாகக் கருதுகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவினர் காட்டும் அலட்சியமும் குரோதமும் அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் நேர்காணலுக்கு வந்த நடிகர் போஸ் வெங்கட் ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் அங்கு அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு வராது என்று கூறியிருப்பது ஒரு மேலோட்டமான சமாதானமாகத் தெரிந்தாலும் அதற்குப் பின்னால் அவர் உதிர்த்த வார்த்தைகள் பெரும் நையாண்டியும் நஞ்சும் கலந்தவை. நாய் நின்றாலும் சரி நரி நின்றாலும் சரி வெற்றி பெற வைப்போம் என்று அவர் குறிப்பிட்டிருப்பது கூட்டணி கட்சியான காங்கிரஸை ஒரு மரியாதைக்குரிய அரசியல் சக்தியாக திமுக பார்க்கவில்லை என்பதையே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒரு தேசியக் கட்சியின் வேட்பாளர்களை நாய் மற்றும் நரியோடு ஒப்பிட்டுப் பேசுவது என்பது அரசியல் நாகரிகத்தின் உச்சக்கட்ட வீழ்ச்சியாகும். இது ஏதோ எதேச்சையாகச் சொல்லப்பட்ட வார்த்தையல்ல மாறாக திமுகவின் ஆழ்மனதில் கூட்டணி கட்சிகள் மீதான கிண்டலும் கிண்டலும் நிறைந்த பார்வையை இது பிரதிபலிக்கிறது.
பாரம்பரிய கட்சி காங்கிரசை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியாது. திமுகவின் பி டீமாக செயல்படும் செல்வப்பெருந்தகை எப்போதும் போல் வாயை மூடி தான் இருப்பார் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் வேதனையில் உள்ளார்கள் . கடந்த காலங்களில் தொகுதிப் பங்கீட்டின் போது திமுக கொடுத்த நெருக்கடிகளும் காங்கிரஸை ஒரு மூலையில் தள்ளி வைத்த விதமும் ஏற்கனவே காங்கிரசை மதிக்காமல் தான் இருந்தது.. திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் பேச்சாளர்களும் தொடர்ந்து கூட்டணி கட்சிகளை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி வருவது திட்டமிட்ட ஒரு அரசியலாகவே பார்க்கப்படுகிறது. போஸ் வெங்கட்டின் இந்தப் பேச்சு வெறும் தனிநபர் கருத்தல்ல இது ஒட்டுமொத்த திமுகவின் அதிகாரத் திமிரின் வெளிப்பாடு. ஒரு வேட்பாளரை நாய் என்று விவரிப்பதன் மூலம் அந்தத் தொகுதியின் வாக்காளர்களையும் அந்த வேட்பாளரைச் சார்ந்திருக்கும் கட்சியையும் எவ்வளவு கீழ்த்தரமாக திமுக நடத்துகிறது என்பது தெளிவாகிறது.
