
கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான்! “உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது.
போலீஸ் அத்துமீறல்களால், வன்முறைகளால் மரணங்கள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் எதிர்க்கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலோ, 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘யாருக்கும் கட்டுப்படாத காவலர்கள், ஒழுங்கீனம் பெருகிப்போன காவல்துறைக் கட்டமைப்பு, அடியாட்களாக மாறிப்போன தனிப்படை, அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்’ எனக் காவல்துறை மீது தொடர்ந்து பொதுமக்களால், மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நடந்தும், காவல்துறையில் எந்த மாற்றமும் நிகழாதிருப்பதால், ‘தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், மனித உரிமை ஆர்வலர்களும்.
போலீஸ் அராஜகத்தில் ஓர் உயிர் பலியானது எவ்வளவு கொடூரமானதோ, அதைவிடக் கொடூரமானது இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தி.மு.க-வும் செய்த அடாவடிகள். 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே அஜித்குமாரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட, படாத பாடுபட்டது காவல்துறை.சென்னையிலிருந்து பறந்துவந்த உத்தரவை நிறைவேற்ற, ஆளாய் பறந்தது அரசு இயந்திரம்.
அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், தி.மு.க-வின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறனும், அவரின் அடிப்பொடிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களோடு சேர்ந்து டி.எஸ்.பி சண்முகசுந்தரமும் கடுமையாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பம் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறது.
இந்தக் காவல் கொலை குறித்த செய்திகள் அனைத்தும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டன. இதில், காவல்துறையின் அலட்சியம், அதிகாரம், அத்துமீறல், திமிர், வன்முறை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்ற... விசாரணையின்போது தப்பியோடப் பார்த்தார். தவறி விழுந்தவருக்கு வலிப்பு வந்துவிட்டது; அதில் இறந்துவிட்டார்’ எனக் கூசாமல் எப்படிப் பொய் சொன்னது போலீஸ்... நிகிதாவின் புகார் உண்மையானதா என்பதை விசாரிக்காமல், அவர் புகாரில் எஃப்.ஐ.ஆரும் போடாமல், அவசர அவசரமாகத் தனிப்படை விசாரிக்கச் சென்றது ஏன்... அவர்களுக்கு பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்... அஜித்குமார் மீது குற்றப் பின்னணியோ, ஆதாரமோ இல்லாத நிலையில், இவ்வளவு கொடூரமாக அவரைத் தாக்கும் துணிச்சல் போலீஸுக்கு எப்படி வந்தது... இன்னும் கேள்விகள் வரிசைகட்டுகின்றன.
தலைமைச் செயலகத்திலிருந்து தகவல் வந்தது எனக்கூறி தனிப்படையினர் 6 பேர் அஜித் குமாரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரி யார்? அவரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என நயினார் நாகேந்திரன்கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அஜித்குமாரின் தம்பிக்குக் கொடுக்கப்பட்ட ஆவின் வேலையும், அவர் அம்மாவுக்கு அளித்த இலவச வீட்டுமனைப் பட்டாவும் ஆட்சியின் பெயரைக் காப்பாற்றிவிடும் என நம்பிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின் . ஆனால் மக்கள், காவல்துறையின் அராஜகத்தால் வெகுண்டு போயிருக்கிறார்கள். ‘முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை?’ எனக் கேட்கிறார்கள். அவர்களின் கோபமும், விமர்சனமும், வெறுப்பும் சரியான சமயத்தில்... இந்த ஆட்சிமீதும், முதல்வர் மீதும்தான் வெளிப்படும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது!
“ஏப்ரல் 18, 2022-ல், சென்னை தலைமைச் செயலகக் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் ‘லாக்கப் டெத்’தில் உயிரிழந்தார். அந்தக் காவல் மரணத்தைத் தவறான தகவலுடன் சட்டமன்றத்தில் பதிவுசெய்தார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த நாளே, மாற்றிப் பேசினார். அப்போதே, தனக்குத் தவறான தகவலை அளித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியான கொடூரங்கள் தொடர்ந்திருக்காது