
மேற்கு வங்காளத் தேர்தல் களத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், 'சிங்கம்' என்று மக்களால் அழைக்கப்படும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவின் வருகை அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றி ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய அஜய் பால் சர்மா, பாதுகாப்புப் பணிகளுக்காக மேற்கு வங்காளத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், அவரது நியமனம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அஜய் பால் சர்மா ஒரு சர்ச்சைக்குரிய அதிகாரி என்றும், அவரது அணுகுமுறை மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் உள்ளது என்றும் கூறி, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அவரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், அஜய் பால் சர்மா ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதையும், தேர்தல் நேரத்தில் மக்கள் பாதுகாப்பு என்பது அமைதியான முறையில் இருக்க வேண்டுமே தவிர, அது மக்களை மிரட்டும் வகையில் அமையக் கூடாது என்பதையும் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், அவர் சாதாரண மக்களை மட்டுமன்றி வேட்பாளர்களையே மிரட்டும் தொனியில் செயல்படுவதாகத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்த மம்தா, அவரைத் தவிர்த்து வேறு எந்த அதிகாரியை வேண்டுமானாலும் பாதுகாப்புப் பணியில் நியமிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மம்தா பானர்ஜியின் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளின் நியமனத்தில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டதுடன், பாதுகாப்புப் பணியில் அஜய் பால் சர்மாவே தொடருவார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் புகார்கள் தொடர்பாகத் தேர்தல் முடிந்த பிறகு பரிசீலிக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் நடைபெறும் இந்தச் சூழலில் அதிகாரிகளின் இடமாற்றம் அல்லது நியமனம் தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். கல்கத்தா உயர் நீதிமன்றமும் இதே போன்றதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், ஏப்ரல் 29-ஆம் தேதி தேர்தல் முடியும் வரை அஜய் பால் சர்மாவின் கண்காணிப்பிலேயே பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், தேர்தல் களத்தில் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடியம் வரை அமைதியை நிலைநாட்டக் கடுமையான அதிகாரிகள் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அஜய் பால் சர்மாவின் அதிரடி நடவடிக்கைகள் தேர்தல் நேரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இனிவரும் நாட்கள் உறுதி செய்யும்.
