India

பிரதமரை நேரடியாக அழைத்த முதல்வர் "ஸ்டாலின் - சோனியா காந்தியை" நேரில் அழைக்காத காரணம் என்ன?

Sundara rajan cholan
Sundara rajan cholan

பதிவு -  எழுத்தாளர் சுந்தரராஜ சோழன். பகிர்ந்தவர்- அசோக். சுந்தரராஜ சோழன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம் சொல்லும் சேதி என்ன என தனது கருத்தை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-கடந்த காலங்களை விட இன்று திமுக வலுவாக உள்ளது.ஒரு பெரிய மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது,அதன் கூட்டணிதான் இங்கே 38 எம்பிக்களை வைத்துள்ளது.நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.


இன்னும் சொல்லப்போனால்,ஒரு தேசிய கட்சியான காங்கிரஸின் வீழ்ச்சி வருகிறபோது, மாநிலக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் கூடிக் கொண்டே போகிறது, ஆக இந்திய அளவில் எல்லா மாநிலக்கட்சிகளுமே விவாதத்திற்குள்ளாகிறது. இதன் காரணத்தாலேயே டெல்லியில் தங்களது கட்சி அலுவலகத்தை திறக்கிறது திமுக.

தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும் போதே டெல்லி சென்று,பிரதமர் மோடி - அமைச்சர்கள்அமித்ஷா, ராஜ்நாத்சிங், கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தலைவர் நட்டா வரை கட்சி அலுவலக திறப்பிற்கு நேரில் சென்று முதல்வர் அழைப்பு விடுத்தார்.

சோனியாகாந்தியை கூட ஸ்டாலின் நேரில் சென்று அழைக்கவில்லை, ஆனால் பாஜக தலைவர்களை அழைத்தார். பாஜக மற்றும் காங்கிரஸிற்கு இடையே சமச்சீரான இடைவெளியை வைத்து அரசியல் செய்யலாம் என திமுக தலைவர் நகர்ந்தது போலவேதான் இருந்தது.

கெஜ்ரிவாலோடு திமுக தலைவர் செலவழித்த நேரமும்,மாநில கட்சிகளோடு காங்கிரஸ் இறங்கி வந்து நட்பு பாராட்ட வேண்டும் என்ற அறிவுரையும்,'All is not well' என்பதையே காட்டுகிறது.திமுக தலைவர் பாஜகவோடு இணக்கம் காட்டலாம் எனப்போகும் போது,

அதை முற்று முழுதாக பாஜக புறக்கணிப்பதே நமக்கு வெளிப்படையாகத் தெரிகிற அரசியல் செய்தி.இன்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த முதல்வராக உண்மையிலேயே இருப்பது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிதான்.நேர்மையாக எடைபோட்டால் அதை உணரலாம். நிற்க.

காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முடியாது என்று சொல்லும் NCP தலைவர் பவாரும் சரி,திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினும் சரி,பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அந்த கூட்டணியை தலைமையேற்க வேண்டுமா என்பதை சொல்ல மறுக்கிறார்கள்.இந்த இடம்தான் ஆபத்தான புள்ளியில் காங்கிரஸ்ஸை வைக்கிறது.

'பூவே உனக்காக' படத்தில் பெட்ரோலையும்,வண்டியையும் பகிர்ந்து கொண்டு செல்லும் நாகேஷ் - நம்பியார் போல ஒருவரை ஒருவரை சார்ந்திருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒன்றாகப் போவோம் என காங்கிரஸை அழைக்கிறார்கள்.அது தேசிய அளவில் காங்கிரஸ்ஸை மாற்று சக்தி இல்லை என உறுதி செய்துவிடும்..

TDP யின் நீண்டகால காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்ட சந்திரபாபு நாயுடு அதிகாரத்தை இழந்துவிட்டார்.இதே நிலைதான் காங்கிரஸ்ஸோடு சந்திரசேகர ராவ் இணைந்தாலும் நடக்கும்,கம்யூனிஸ்ட்டுகளோடு மம்தா இணைந்தாலும் நடக்கும்.இந்த கூட்டணிகள் எல்லாம் தேசிய அளவில் உருவாக வாய்ப்பே இல்லை.

இந்த இக்கட்டான நிலையிலே, காங்கிரஸ் மீண்டு வர வேண்டும் அது தன்னுடைய பார்கெயினிங் பவரை இழக்கக்கூடாது என நிதின்கட்கரி சொல்வது,மாநில கட்சிகளிடம் தங்களை அடமானம் வைப்பதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் என்ற பொருள் கொண்டது அதை எதிர்காலத்தில் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரை/பதிவு தனி நபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததை TNNEWS24 குழு இணையதளம் மூலம் பொது பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவுகிறது, இந்த கட்டுரை TNNEWS24 குழுவால் உருவாக்கப்பட்டதல்ல . உங்களது சிறப்பு கட்டுரைகள் /பதிவுகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.. EMAIL - [email protected] (T& C APPLY)