
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு துறை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சீரழிந்து வருகிறது. திருபுவனம் அஜித் குமாரை 6 காவலர்கள் இணைந்து அடித்தே கொன்றது, நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்தது. இன்னும் பலவற்றில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறையில் பதவி ஏற்றதில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தும் 1200 பேரை மீது வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் தொடர்பாக தீவீரமாக செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே டி.எஸ் .பி சுந்தரேசன் கடந்த 17-ம் தேதி காலை தனது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் தருவதாகவும், தன்னை வளைந்து நெளிந்து செல்ல வேண்டும் என உயர் அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதேநேரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனின் செயலுக்கு மறுப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடமும் விசாரணை மேற்கொண்ட தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் அவர்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து கொண்டார். காவல்துறை வாகனம் பறிக்கப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்ததாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்கள் மட்டுமே செய்தியாளர் சந்திப்பு மற்றும் செய்தி குறிப்புகள் வெளியிட வேண்டும் என்ற விதியை மீறி தன்னிச்சையாக டி.எஸ்.பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்ததால் டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் திருச்சி மத்திய மண்டல ஐஜிக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. இதற்கிடையே மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசனை அரசு பொது ஊழியர்களுக்கான விதிமுறைகளை மீறியதாக ஒழுங்கீன செயலில் ஈடுப்பட்டதாக கூறி உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறையில் பதவி ஏற்றதில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தும் 1200 பேரை மீது வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் தொடர்பாக தீவீரமாக செயல்பட்டு வந்தார். இதனால் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் ஒரளவு கட்டுக்குள் இருந்துவந்தது. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளிலிருந்து மயிலாடுதுறை பகுதியில் பூட்டி கிடந்த சட்டவிரோதப்பார்களை மீண்டும் திறந்து விட்டனர். குறிப்பாக சித்தர் காடு பகுதியில் காவிரிக்கரை அருகில் செயல்படும் டாஸ்மார்க் கடையில் பொது வெளியில் அட்டைப் பெட்டியில் வைத்துக் கொண்டு டாஸ்மார்க் சரக்கு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டிஎஸ்பி சஸ்பெண்ட் ஆர்டர் கைக்கு வருவதற்கு முன்பே பார்களை திறந்து விட்டனர் என்றால் இன்னும் சில நாட்களில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். தற்பொழுது வெட்ட வெளியில் மதுபானம் விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சூழலில் மயிலாடுதுறையில் நேர்மையாக பணியாற்றி, போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கணிசமாக குறைந்த ஓர் நேர்மையான அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆதரவாக மயிலாடுதுறை மாவட்டம் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்றினைந்து நீதிக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் வருகின்ற 23.07.2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு டிஎஸ்பி சுந்தரேசன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை செய்யவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.