Cinema

அண்ணாமலை பஞ்ச் சினிமா பாணியில் கதறிய வீரமணி...!

Annamalai, veeramani
Annamalai, veeramani

சினிமா பாணியில் பஞ்ச் வசனம் பேசுவது போல் வீரவசனம் பேசி கதறி இருக்கிறார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கடந்த ஞாயிறு அன்று கட்சியினர் மத்தியில் பேசிய அண்ணாமலை தமிழகத்திற்கு தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள் ஆய்விற்கு வருவார்கள் என தெரிவித்தார் இந்த செய்திக்கு பதில் அளித்த வீரமணி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.இது குறித்து வீரமணி தெரிவித்ததாவது,


‘பெரியார் மண்’ என்று ராகுல் காந்தி போன்றவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்தத் தமிழ்நாட்டில் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் - அதன் ஆற்றல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது மகத்தான ஆளுமை, உழைப்பின் உருவமாகத் திகழ்ந்து ‘அனைவருக்கும் அனைத்தும்‘ தர அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் தனித்த பெருமையை அகிலம் பாராட்டுகிறது!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்திட கனவு காண்கிறார்கள் ஆனால், தமிழ்நாட்டைக் ‘காவி மயமாக்கி’, அதில் பா.ஜ.க. ஆட்சி ஏற்படுத்திட கனவு கண்டு, கற்பனைக் குதிரையின்மீது - அக்குதிரை கூட  வெறும் பொய்க்கால் குதிரைதான் என்பதைக்கூட மறந்து - தங்களிடம் உள்ள அதிகார பலம், பண பலம் (கார்ப்பரேட்டுகள் துணையோடு), ஊடக பலம், பழைய கிரிமினல்களின் வாய் வீச்சு - ரவுடியிசம், அடாவடி அக்கப்போர்களை வைத்து, அரசியல் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க பேராசைப் பிடித்து அலைகின்றனர்.

பூணூல் ஏடுகளும், அவர்களது பக்கவாத்தியங்களான பஜனைக் கூட்டமும் தினமும் முதலமைச்சரை, தி.மு.க. அமைச்சர்களை, ஆ.இராசா, தருமபுரி செந்தில்குமார் போன்ற கொள்கையாளர்களை நாளும் விமர்சித்து, தங்கள் மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளுகிறார்கள்!

ஆ.இராசா மீதான அவதூறு என்னாயிற்று? திராவிடர் கழக நிகழ்ச்சியில் மனுதர்மத்தில் உள்ள இழிவைச் சுட்டிக்காட்டி - இதை ஏற்றுக்கொண்டு மானமுள்ளவர்கள் வாழ முடியுமா என்ற மறுக்க முடியாத கேள்வியை - வெட்டி ஒட்டி, திசைத் திருப்பி, தி.மு.க.வுக்கு எதிராகச் செய்த ‘அபவாதம்‘  நீர் எழுத்துக் கனவாக முடிந்துவிட்டது!சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கே இதற்கு தக்க சான்று ஆகும்.

பா.ஜ.க.வின் ஒரு மாநிலத் தலைவராக உள்ள ஒருவர் - அதுவும் தனக்கு ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். என்ற தகுதியிருக்கிறது என்பதைக்கூட மறந்துவிட்டு, எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று அரசியலில் வித்தைக் காட்டித் திரிகிறார் நாளும்!

இன்றேல், ‘நானே முதலமைச்சருக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவேன்’ என்று பேசி, தனது உண்மை தரத்தை, ‘தகுதியை’ வெளிச்சம் போட்டுக் காட்டுவாரா?

‘மிசா’வில் மு.க.ஸ்டாலின் கைதாகவில்லையாம்!‘‘மிசா’விலே ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை’’ என்று ஒரு கோணிப் புளுகை, கோயபெல்சையும் மிஞ்சும் சாணிப் புளுகை, ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மீது சுமத்துவாரா? 44 ஆண்டுகளுக்குமுன் ‘மிசா’ கைதியாக இருந்த எங்களைப் போன்றவர்கள் உயிருடன் சாட்சிகளாக இருக்கையிலேயே இப்படி ஒரு ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை’ உதிர்த்து, அரசியல் செய்ய வெட்கத்தை மறந்து திரியலாமா - இவர்கள்?

‘ஜஸ்டீஸ் இஸ்மாயில் கமிஷன்’ என்ற ஓர் அறிக்கையிலே - அவர் தாக்கப்பட்டது, எங்களைப் போன்றவர்கள் தாக்கப்பட்டது, மறைந்த மேயர் சிட்டிபாபுவின் டைரி - இவற்றைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டதையாவது அவருக்கு அரசியல் சொல்லிக் கொடுப்பவர்கள் சொல்லிக் கொடுக்கவேண்டாமா?

இதனால், பா.ஜ.க.வும், அதன் தலைமையும் எவ்வளவு நம்பகத்தன்மையற்ற அண்டப் புளுகு அரைவேக்காடுகள் என்பது உலகிற்கே புரிகிறதே.36 ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்குப் படை எடுக்கிறார்களாம் ஓர் ஒன்றிய அமைச்சர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 90 விழுக்காடு முடிந்துவிட்டன என்பதுபோல, முடிந்து வருகிறது என்று பட்ஜெட்டில் சொன்னார்.

உடனே மதுரை (கம்யூனிஸ்ட்) எம்.பி., சு.வெங்கடேசன் அவர்களும், மற்ற எதிர்க்கட்சி நண்பர்களும் அதற்கு ஆதாரம் கேட்டார்களே, பதில் உண்டா?

இதுவரை 16 ஒன்றிய அமைச்சர்கள் வந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்திட முனைப்புடன் பிரச்சாரம் செய்துவிட்டார்களாம்.அடுத்து மேலும் 36 ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து படையெடுத்து ‘‘தாமரையை மலர வைக்கப் போகிறார்களாம்!’’

ஏற்கெனவே 2 மாதத்தில் 16 ஒன்றிய அமைச்சர்கள் வந்து சென்றார்களாம்!- இது திராவிடக் கடல், சமூகநீதிக் கடல் - இதில் உங்கள் தாமரையை நடலாமா? நட்டால் நிற்குமா? இந்த அடிப்படையைக்கூட மறந்துவிட்டு, வானத்தை வில்லாய் வளைப்போம் என்று வக்கணை பேசுகிறீர்களா?

இன்று பா.ஜ.க.வின் முதல் வாக்கு வங்கிச் சேர்ப்பாளர் என்று கருதப்படுபவர் பிரதமர் மோடிதானே.அவர், தமிழ்நாட்டிற்குப் பல தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து, சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களில் பிரச்சாரம் செய்தாரே - என்ன பலன் கண்டது பா.ஜ.க.?அதெல்லாம் மறந்துவிட்டதா?

சு.சாமி கேள்விக்குப் பதில் என்ன?ஒட்டுமொத்த ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறினால்கூட, இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவோ, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கவோ உங்களால் முடியாது என்பது உலகறிந்த உண்மை. அரசியல் மூர்க்கத்தனம் உங்களுக்குக் கேடாய் முடியும்.

அவ்வளவுதூரம் விளக்கவேண்டியதில்லை. நேற்றுவரை உங்கள்  கட்சியின் எம்.பி.,யாக இருந்த சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு முதலில் பதில் சொல்ல முயலுங்கள்.

‘‘முதலில் தனித்து நின்று தமிழ்நாட்டில் 5 இடங்களில் வென்று காட்டுங்கள்’’ என்று கேட்டாரே - அதனை உங்கள் அமைச்சர் கூட்டம் செயலில் காட்டுமா?ஒன்றிய அமைச்சர்கள் எந்த ‘மந்திர’, ‘மாந்திரீகம்‘மூலம் செய்வார்கள்? ‘வித்தைகள்’ இங்கே போணியாகாது.

தமிழ்நாட்டில் குதிரைபேரம் நடத்த முடியாது!மற்ற சில மாநிலங்களில் ஆளும் கட்சியில் ‘‘குதிரை பேரம்‘’ நடத்துவது போன்று, பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் நடத்த முடியாது - அதில் வெற்றி பெறவும் முடியாது என்பதைப் புரிந்து, ஜனநாயக முறையில் கட்சிப் பணியை நடத்துங்கள்,குறைந்தபட்ச மரியாதையாவது மிஞ்சும் என தெரிவித்துள்ளார் வீரமணி.