24 special

இந்தியாவுடன் மோதினால் இதுதான் கதி வங்கதேசத்தில் காணாமல் போன மாணவர் புரட்சி.. ஆடிப்போயிருக்கும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான்

DONALDTRUMP,SHEHBAZSHARIF
DONALDTRUMP,SHEHBAZSHARIF

வங்கதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. 17 ஆண்டுகால நாடுகடத்தப்பட்ட வாழ்க்கைக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசிய கட்சி 300 இடங்களில் 212-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர்” என்ற அங்கீகாரத்தை தாரிக் ரஹ்மான் பெற்றுள்ள நிலையில், இந்தியா இதனை வரவேற்றுள்ளது. 


ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுடன் இணைந்து செயல்படுவதே இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மாணவர் புரட்சியை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கின்றன. ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்தி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று வீதியில் இறங்கி போராடிய மாணவர் அமைப்பான ‘நேஷனல் சிட்டிசன் பார்ட்டி’ வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கும், புதியதாக அமையப்போகும் தாரிக் ரஹ்மான் அரசுக்கும் இடையே பொறுப்புக்கூறல் என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. முகமது யூனுஸின் ஆட்சியில் முழு அதிகாரம் இருந்தது, ஆனால் மக்களுக்கான பொறுப்புக்கூறல் இல்லை. அவர் அமெரிக்காவுடன் அவசர அவசரமாக மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் வங்கதேசத்திற்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரை, இந்த தேர்தலில் ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. வங்கதேச தேர்தல் ஆணையம் இந்தியாவை தேர்தல் பார்வையாளர்களை அனுப்புமாறு அழைத்திருந்தும், இந்தியா அதை நாசூக்காக மறுத்துவிட்டது. வங்கதேச உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்ற தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா ஒதுங்கி நின்றதால், இந்த தேர்தலின் முடிவுகளை எவராலும் கேள்வி கேட்க முடியவில்லை. 

இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று வல்லரசு நாடுகளும் தாரிக் ரஹ்மானின் வெற்றியை ஏற்றுக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளன. இது புதிய அரசுக்கு சர்வதேச அளவில் ஒரு பலமான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பாகிஸ்தானிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. முகமது யூனுஸ் ஆட்சியில் இருந்தபோது, பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால், தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் நலன் என்ற கொள்கையை முன்வைப்பதால், அவர் இந்தியாவுடன் இணக்கமான உறவை பேண விரும்புவதாகத் தெரிகிறது.  புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பிப்.17ம் தேதி பதவியேற்கிறார்.இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று வங்கதேசம் அழைப்பு விடுத்தது.  இந் நிலையில், தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது ஏற்கனவே இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் மூலம் உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.