24 special

உலகை எச்சரித்த ரஷ்யா...நடுக்கத்தில் அமெரிக்கா... உற்றுநோக்கும் உலக நாடுகள்

DONALDTRUMP,VIADIMIRPUTIN
DONALDTRUMP,VIADIMIRPUTIN

தற்போது  உலகம் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி படு வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாடுகளும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏவுகணைகள் முதல் பல்வேறு  ஆயுதங்களை தயாரித்து வருகிறது  உக்ரைன்–ரஷ்யா மோதல், தற்போது உலகை புதிய கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டது. இதற்குப் பின்னால் இருப்பவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டீன்.


சமீபத்தில் ரஷ்யா இரு வகை மிக வலிமையான ஏவுகனைகளை சோதித்துள்ளது. ஒன்று வானில் இயங்கக்கூடியது; மற்றொன்று கடலடியில் இயங்கக்கூடியது. உலகில் ஏவுகனைகள் புதிதல்ல, அவற்றின் வேகமும் புதிதல்ல. ஆனால் இங்கு புதுமை என்னவெனில், அந்த ஏவுகனையின் எரிபொருள் — அணுசக்தி. அணுசக்தியால் இயங்கும் ஏவுகனைகளை உருவாக்கி சோதித்திருப்பது ரஷ்யாவாகும். இத்தகைய ஏவுகனைகள் வானில் பல நாட்கள் நிலைத்திருக்கும் திறனை கொண்டவை. எரிபொருள் பற்றிய எந்தக் கவலையும் இவை எதிர்கொள்வதில்லை.

பொதுவாக ஏவுகனைகள் திட அல்லது திரவ எரிபொருளை பயன்படுத்துகின்றன. இவைதான் இந்தியாவின் மகேந்திரகிரி மலை போன்ற இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ரஷ்யா இதற்குப் பதிலாக அணுசக்தி எந்திரத்தை பொருத்தியுள்ளது. இதனால் ஏவுகனையின் சக்தி மற்றும் செயல்திறன் பெருமளவில் அதிகரிக்கிறது. ஆனால் இதுவே உலகத்திற்கு பெரும் ஆபத்தையும் கொண்டுவருகிறது. ஏனெனில் அணுசக்தியால் இயங்கும் ஏவுகனை தரையில் விழுந்தாலோ அல்லது செயலிழந்தாலோ, கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படும். இதனால் இது சிறிய அளவிலான அணு ஆயுதத்துடன் ஒப்பிடத்தக்கதாக மாறுகிறது. இது ஒரு புதிய வகை அணு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வழங்கும் தொடர்ச்சியான ஆயுத உதவிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு விதிக்கப்பட்ட தடைகள் ஆகியவற்றால் புட்டீனின் பொறுமை முடிந்துவிட்டது. அதனால் தான் அவர் இப்போது அணுசக்தி ஏவுகனை சோதனை செய்து உலகுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ரஷ்யாவுக்கு இல்லாத உலகம் ஏன் இருக்க வேண்டும்” என்ற புட்டீனின் பழைய கருத்துக்கு இது இன்னொரு உறுதியான ஆதாரம்.

இதற்கு பதிலாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். 1991-க்கு பிறகு அமெரிக்கா எந்த அணுகுண்டு சோதனையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் புட்டீனின் சோதனைக்குப் பிறகு உலகம் மீண்டும் பனிப்போர் கால ஆயுதப்போட்டிக்குத் திரும்பிவிட்டது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும் புட்டீனோ டிரம்போ உடனடியாக அணுகுண்டை வீசுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவை அனைத்தும் மிரட்டல்களும், பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளும்தான். ஆனால் ரஷ்யா செய்திருக்கும் இந்த சோதனை உலகத்தை புதிய தொழில்நுட்ப திசைக்கு இட்டுச் செல்கிறது. இதுவரை அணுசக்தியில் இயங்கும் போர்கப்பல், நீர்மூழ்கி இருந்தாலும், ஏவுகனையில் அணுசக்தி பயன்படுவது இதுவே முதல்முறை.

இத்தொழில்நுட்பம் வருங்காலத்தில் செயற்கைகோள் ஏவுதல் ராக்கெட்டுகளுக்கும், விண்வெளி பயணங்களுக்கும், கூடவே விமானங்களுக்கும் வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்பங்கள் வேகமாக பரவிவிடும் என்பதால், அடுத்த சில தசாப்தங்களில் அணுசக்தி ஏவுகனைகள் பல நாடுகளில் பரவக்கூடும். இதனால் மரபுவழி எரிபொருள் பயன்பாடு மெல்லமெல்ல குறையும் நிலையும் உருவாகலாம்.

இந்நிலையில் ரஷ்யா செய்திருக்கும் அணுசக்தி ஏவுகனை சோதனை, உலக சக்தி சமநிலையை மாற்றும் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் மீண்டும் ஆயுதப் போட்டி தீவிரமடையும் அச்சம் எழுந்துள்ளது. புட்டீன் ராணுவ உடையில் தோன்றி இந்த சோதனையை அறிவித்தது, “உலகப் போருக்கு ரஷ்யா தயார்” என்பதற்கான தெளிவான செய்தி என பல நிபுணர்கள் விளக்குகின்றனர்.