24 special

அப்துல்கலாம் தயார் செய்த அந்த ஆயுதம்! வெளியே எடுக்கும் இந்தியா! உலக நாடுகள் அதிர்ச்சி

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் அணு ஆயுதச் சோதனையைத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் அணு ஆயுதப் போட்டி மீண்டும் வெடிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, சீனா போன்ற அணுசக்தி மிக்க நாடுகள் ஏற்கனவே புதிய ஆயுத தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த முயற்சி உலகின் அமைதிக்கே அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. வடகொரியா முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், 2003ல் விலகி, 2006 முதல் தொடர்ச்சியாக சோதனைகளை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ஒரு போதும் அணு ஆயுதம் இருப்பதாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அந்த நாட்டிடம் அணு குண்டுகள் இருப்பது அனைவரும் அறிந்த ரகசியமே.

ரஷ்யாவிடம் 5,500 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 5,044 ஆயுதங்களும் உள்ளன. உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்நாடுகளிடம் மட்டுமே உள்ளன. சீனாவிடம் 600, பிரான்சிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 180, பாகிஸ்தானிடம் 170, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 50 அணு ஆயுதங்கள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்நாடுகள் சேர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மை.

அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் வெடிகுண்டு. இதுவே மனிதன் உருவாக்கிய மிக அழிவூட்டும் ஆயுதமாக கருதப்படுகிறது. 1952ல் அமெரிக்கா முதன்முதலில் ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்தது. அதன் பிறகு 1953ல் ரஷ்யா, 1966ல் சீனா, 2016ல் வடகொரியா இதேபோன்ற சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியன. சமீபத்தில் சீனா அணுசக்தி இல்லாத ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை செய்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் மூலம் போர் தொழில்நுட்பம் புதிய நிலையை நோக்கிச் செல்கிறது என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவும் அணுசக்தி துறையில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில்,டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தலைமையில் ராஜஸ்தானின் போக்ரான் பகுதியில் இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. சக்தி-1 முதல் சக்தி-5 வரை மொத்தம் ஐந்து சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் சக்தி-1 சோதனை ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையாகும். அந்த சோதனையில் 45 கிலோடன் ஆற்றல் வெளிப்பட்டதாக இந்தியா அறிவித்தது. ஆனால் அமெரிக்கா அந்த சோதனை முழுமையாக வெற்றி பெறவில்லை என்றும், இந்தியா ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக சோதனை செய்யவில்லை என்றும் தெரிவித்தது.

இப்போது அமெரிக்கா மீண்டும் அணு ஆயுதச் சோதனையைத் தொடங்கியுள்ளதால், உலகளவில் அணு ஆயுதப் போட்டி மீண்டும் தீவிரமடையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகள் தங்கள் அணு திறனை வேகமாக மேம்படுத்தி வருகின்றன. இதனால் இந்தியாவும் தனது பாதுகாப்பு வலிமையை உறுதி செய்வதற்காக ஹைட்ரஜன் குண்டு சோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உலகம் மீண்டும் அணு சக்தியின் ஆட்டத்துக்குள் நுழைந்து விட்டது. 20ஆம் நூற்றாண்டில் பனிப்போர் காலம் உருவாக்கிய பயம், 21ஆம் நூற்றாண்டில் புதிய வடிவில் மீண்டும் உயிர்ப்பெடுத்து வருகிறது. அமைதி என்ற சொல் ஒரு கருத்தாக மட்டுமே மாறிவிடும் அபாயம் நெருங்கிவிட்டது.